தொற்று பரவலில் அரசு தோல்வி கண்டுள்ளது

சிவப்புப்பட்டியலில் இலங்கையென சுமந்திரன் கவலை

கொவிட் -19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதால் பல சர்வதேச நாடுகளின் சிவப்புப்பட்டியலில் இலங்கை பட்டியல் படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் கொவிட் -19 வைரஸ் தொற்றுப்பரவல் நிலைமைகள் காரணமாகவும், மோசமான பாதிப்புகள் காரணமாகவும் இலங்கை இன்று பல நாடுகளின் சிவப்பு பட்டியலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் பல நாடுகள் தமது நாட்டுக்குள்வருவதற்கு இலங்கை பிரஜைகளை அனுமதிக்காததையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளினூடாக வேறு நாடுகளுக்கு பயணிக்கவும் அனுமதிக்காத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

தற்போது நாம் கொவிட்19 நான்காம் அலையொன்றுக்கு முகங்கொடுக்கும் நிலையொன்று ஏற்பட்டுள்ளது, சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் இருந்து இதனை எச்சரித்து வந்ததுடன், நாடு மோசமான கொவிட்19 வைரஸ் பரவலுக்கு முகங்கொடுத்தால் அதற்கு தாம் பொறுப்பில்லயெனவும் கூறியுள்ளனர். அவர்களின் நிலைப்பாடு நியாயமானதே, ஏனென்றால் அவர்கள் கூறும் காரணிகளை தீர்மானம் எடுக்கும் தரப்பு செவிமடுப்பதில்லயென்பதையே அவர்கள் கூறுகின்றனர். இராணுவத் தளபதியின் தலைமையின் கொவிட்19 செயலணியொன்று இயங்குகின்றது. ஆனால் அவர்கள் கொவிட்19 நிலைமைகளை கையாள்வதில் பலவீனம் கண்டுள்ளனர். இலங்கையின் வைத்தியசாலைகளின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதனை பார்த்தால் நாட்டின் நிலைமைகள் வெளிப்படுகின்றது. அதேபோல் சபைக்கு வந்தபோதும் சில நண்பர்கள் கொவிட்19 வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டது.

அதுவும் நாட்டின் ஏனைய பகுதிகளின் நிலை என்னவென்பதை வெளிப்படுத்துகின்றது. கொவிட் வைரஸை கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது, அதனை மறைக்க அடக்குமுறையை அரசாங்கம் கையாண்டு வருகின்றது என்றார். 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Sat, 08/07/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை