இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு சவுதியிடம் அரசாங்கம் வேண்டுகோள்

இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு சவுதி அரேபியாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் அடெல் பின் அஹமத் அல்-ஜுபைருடன் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன நடத்திய கலந்துரையாடலின் போதே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

சவுதி அரேபியாவுடனான இருதரப்பு உறவுகளைப் பாராட்டிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதற்கான சாத்தியங்களை எடுத்துரைத்துள்ளார்.

இரு நாடுகளினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்கி உதவியமைக்கு அவர் நன்றி தெரிவித்தத்துடன் திறமையான மற்றும் தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குமாறும் அவர் சவுதி அரேபியாவை கேட்டுக்கொண்டார்.

கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்ப உதவிய சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு வெளிவிவகார அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

அரசியல், பொருளாதார, சமூக மற்றும் அபிவிருத்தித் துறைகளிலும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளிலும் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் குணவர்தன வலியுறுத்தியதுடன் இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நெருக்கமாகப் பணியாற்றியமை மற்றும் பல சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் ஆதரித்தமை குறித்து இதன்போது இரு அமைச்சர்களும் நினைவு கூர்ந்தும் உள்ளனர்.

 

Sat, 08/14/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை