அணுப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப ஈரான் புதிய ஜனாதிபதிக்கு அமெரிக்கா அழைப்பு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு உடன்படிக்கையை புதுப்பிக்கும் பேச்சுவார்த்தைக்கு திரும்பும்படி ஈரானின் புதிய ஜனாதிபதிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

இராஜதந்திர முயற்சிக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்காது என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அணு உடன்படிக்கையில் இருந்து விலகி அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் கொண்டுவந்ததை அடுத்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஈரானின் புதிய ஜனாதிபதியாக கடந்த வியாழக்கிழமை பதவியேற்ற இப்ராஹிம் ரைசி, ஈரான் மீதான தடைகளை முடிவுக்குக் கொண்டுவரும் ‘எந்த இராஜதந்திரத் திட்டங்களுக்கும்’ ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

‘ஈரான் மீதான அனைத்து சட்டவிரோதத் தடைகளும் அகற்றப்பட வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக மேற்குல நாடுகள் குற்றம்சாட்டுகின்றபோதும் அதனை ஈரான் மறுத்து வருகிறது.

2015 ஆம் ஆண்டு ஈரான் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையிலான அணு உடன்படிக்கை மூலம் ஈரான் மீதான அணு செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு பகரமாக ஈரான் மீதான தடைகளை தளர்த்துவதற்கு சர்வதேச நடுகள் முன்வந்தன.

டிரம்ப் இந்த உன்படிக்கையில் இருந்து வெளியேறியதை அடுத்து ஈரான் தடை செய்யப்பட்ட அணு செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்தது.

இந்நிலையில் ஈரான் மற்றும் ஏனைய நாடுகளுக்கு இடையே சிக்கலான பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இடம்பெற்று வருகிறது. இதில் குறித்த அணு உடபடிக்கையை புதுப்பித்து ஈரான் மீதான தடைகளை தளர்த்த இரு தரப்பும் முயன்று வருகின்றன. எவ்வாறாயினும் இந்த பேச்சுவார்த்தை கடந்த பல வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் புதிய ஜனாதிபதியாக ரைசி பதவியேற்றது குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைசிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஈரானை விரைவாக பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் அதன்மூலம் எமது பணிகளை முடிக்க முடியுமாக இருக்கும்’ என்று பதிலளித்தார்.

‘ஜனாதிபதி ரைசிக்கு கூறுவதும் அவருக்கு முன்னர் இருந்தவர்களுக்கு கூறுயதாகவே இருக்கும். எமது நாட்டினதும் எமது கூட்டாளிகளினதும் பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்யும். இராஜதந்திர தீர்வு ஒன்றுக்கு தற்போது இருக்கும் சந்தர்ப்பத்தை ஈரான் பயன்படுத்திக் கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் தடைகளால் ஈரான் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் சவாலான சூழலிலேயே ரைசி பதவிக்கு வந்துள்ளார். எனினும் இந்த ஒடுக்கப்படும் தடைகளில் இருந்து நாட்டை விடுவிப்பதாக ரைசி வாக்குறுதி அளித்துள்ளார்.

குறிப்பாக கடந்த வாரம் ஓமானுக்கு அருகில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது ஆளில்லா விமானத்தினால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் காரணம் என்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் குற்றம்சாட்டும் நிலையில் தற்போது பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இந்தக் குற்றாச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

60 வயதான ரைசி ஈரான் உயர்மட்ட தலைவர் அயதொல்ல அலி கமெனேவுக்கு நெருக்கமானவராக உள்ளார்.

முன்னாள் நீதித்துறை தலைவரான அவரது மனித உரிமை செயற்பாடுகள் பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்தன. 1988 இல் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் கொல்லப்பட்டதற்கு ரைசி மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை மீறல் குற்றசாட்டில் ரைசி மீது 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 08/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை