புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வெளிநாட்டிலுள்ள இலங்கையர் நாட்டுக்கு அழைத்துவரப்படுவர்

64206 பேர் நாடு திரும்ப விண்ணப்பம்

புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக வெளிநாட்டில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவரும் பணியும் சர்வதேச விமானப் போக்குவரத்தும் இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காகவெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிவிவகார அமைச்சின்கீழ் இயங்கும் இணையத்தில், இலங்கைக்கு வருவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் விபரங்கள் வருமாறு, 2020ஆம் ஆண்டில் 2603 பேரும் 2021ஆம் ஆண்டில் 61,603 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதில் வெளிநாடுகளுக்கு குறுகிய பயணங்கள் சென்ற 5902 பேரும், 3357 மாணவர்களும், 52, 348 பணியாளர்களும் அடங்குகின்றனர்.

அரபு நாடுகளில் 32,000 வரையிலானர்களும் பசுபிக் வலையத்தில் 7800 பேரும், தெற்காசிய நாடுகளில் 3100 பேரும், கிழக்கு ஆசிய நாடுகளில் 3300 பேரும், 30200 பேர் ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வர விண்ணப்பித்திருந்தனர்.

வட அமெரிக்காவில் இருந்து 1442 பேரும், ஆபிரிக்க நாடுகளில் இருந்து 479 பேரும், இலத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்து 62 பேரும் 82 பேர் ஏனைய நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வர விண்ணப்பித்திருந்தனர்.

அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்காக புதிய வழிகாட்டல்களை கடந்த ஜுலை 15ஆம் திகதி சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இந்திய, ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான வழிகாட்டல் வழக்கப்பட்டுள்ளதுடன், 75 சதவீதமான பயணிகளை விமானங்களில் அழைத்துவரல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

108 பேர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரமுடியாது நெருக்கடி நிலையை எதிர்க்கொண்டிருந்தனர். அவர்களுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் சட்ட ஆலோசனைகள் இலங்கை தூதுவராலயாத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் காணப்படும் வசதிகளுக்கு ஏற்ப வெளிநாடுகளில் இருந்து இலங்கை பிரஜைகள் அழைத்துவரப்படுகின்றனர். சுகாதார அமைச்சு, கொவிட் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்து வருகிறது. சில நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தர விதிக்கப்பட்டிருந்த தடைகள் குறித்து புதிய சுகாதார வழிகாட்டியில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சிலரை அழைத்துவருவதற்கான சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக அரசாங்கம் செயல்படுகிறது. வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களை மீண்டும் அழைத்துவரும் பணியில் தாய்மார்கள், வேலையற்றவர்கள், நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதுடன், நிர்க்கதியாகியுள்ள பணியாளர்களுக்காக 130 மில்லியன் ரூபா மருத்துவ உதவிகளுக்காக ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

வீசா காலம் முடிவடைந்தவர்களுக்கு வீசாவை நீடித்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தூதுவராலயங்கள் செய்துள்ளன என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Wed, 08/04/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை