நாட்டை முடக்காது திறந்து பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்

 நாட்டை மூடி வைப்பது பிரச்சினைக்கு தீர்வாகாது முன்னணி வர்த்தகர்கள் பலரும் கருத்து தெரிவிப்பு

 

கொவிட்19 தொற்று பிரச்சினைக்கு உலகின் ஏனைய நாடுகளை போன்று நாமும் முகங்கொடுத்தாக வேண்டும்.நாட்டை மூடுவது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.அதற்காக பொருளாதார செயற்பாடுகளை முடக்கி தீர்வு காண்பதற்கோ வெற்றிகொள்வதற்கோ முடியாதென முன்னணி வர்த்தகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

பல நாடுகள், நாட்டை முடக்காது கடுமையான சுகாதார பாதுகாப்புடன் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுப்பதை போன்று இங்கும் மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சீனங்கோட்டை மாணிக்கக்கல் மற்றும் ஆபரண சங்க முக்கியஸ்தரான எம்.ரீ.எம். மக்கி

17 வருடங்களுக்கு மேலாக மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறேன். மாணிக்கக்கல் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டும் செய்கிறேன். கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக மாணிக்கக் கல் வர்த்தகம் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளது. மாணிக்கக் கல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மட்டுமன்றி அதனுடன் தொடர்புள்ள பெருமளவானவர்களுக்கும் இதன் தாக்கமுள்ளது.

தற்பொழுது ஒன்லைன் மூலமாக மாத்திரம் குறைந்தளவான வர்த்தகம் நடைபெறுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதால் எமது வியாபாரத்திற்கு அதிக தாக்கம் ஏற்பட்டுள்ளது.

குறைந்தளவான வெளிநாட்டவர்கள் வருகை தந்தாலும் அவர்களுக்கு மாணிக்கக் கற்களை காண்பித்து விற்க முடியாதுள்ளது. ஊரடங்குடன் மாணிக்கக் கல் வாங்கவும் விற்கவும் கூடும் ('பத்தை') சீனங்கோட்டை சர்வதேச மாணிக்க வர்த்தக சந்தையும் மூடப்பட்டுள்ளது.அநேக நாடுகள் கொரோனாவுடன் நாட்டை மூடாது பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.

இங்கும் நாட்டை மூடாது சுகாதார கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டால் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படாதென்றார்.

கொழும்பு வர்த்தகர் சங்கச் செயலாளர் சமிந்த விதானகமகே,

கோவிட் 19 தொற்று பிரச்சினைக்கு உலகின் ஏனைய நாடுகளைப் போன்று நாமும் முகம்கொடுத்தாக வேண்டும். அதற்காக பொருளாதார செயற்பாடுகளை முடக்கி தீர்வு காண்பதற்கோ வெற்றிகொள்வதற்கோ முடியாது.

முதலில் நாம் எமக்கு முன்பாக இருக்கும் சவால் என்ன என்பதை அடையாளம் காணவேண்டும். இந்த விடயத்தில் நாம் யாரையும் குற்றம் காண முடியாது. தனித்தனியாகவோ குழுக்களாகவோ சமூகமாகவோ நாடு என்ற ரீதியில் இந்தச் சவாலை வெற்றிகொள்ள செயற்பட வேண்டும்.

இந்த சவாலுக்கு முகம்கொடுப்பதற்கு உடனடியாக புதிய முகாமைத்துவ முறை,கொள்கைக் கட்டமைப்பு என்பன தயாரிக்கப்பட வேண்டும். கோவிட்டுடன் போராடியவாறு வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். நாம் வழமையான வட்டத்திலிருந்து மீண்டு புதிதாக சிந்திக்க வேண்டும். இந்த சவாலை எதிர்கொள்வதற்காக புதிய தொழில்நுட்பம், நவீன உலக சமூக பொருளாதார போக்குகளை ஆராய்ந்து தீர்வுகளை தேட வேண்டும்.

அதன் வாயிலாக சமூக , பொருளாதார செயற்பாடுகளை முடக்காது முன்னோக்கி செல்வற்கு ஏற்ற மூலோபாயங்களை நாட்டுக்கும் சமூகத்துக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.டிஜிட்டல் மயமாக்கல் அதில் பிரதானமானது என்றார்.

வாகன விற்பனை உரிமையாளர் சங்க முக்கியஸ்தர் ராஸிக் அன்வர்,

ஜனாதிபதி எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. இந்த முடிவை முன்கூட்டி எடுத்திருக்க வேண்டும். கொரோனா மற்றும் முடக்கம் காரணமாக பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ள போதும் மக்களின் உயிர்களை பாதுகாப்பது பிரதானமானது. இந்த பிரச்சினைக்கு முழு உலகமும் முகம் கொடுத்துள்ளது.

நாட்டை திறந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் பொருளாதார செயற்பாடுகள் சில நாடுகளில் முன்னெடுக்கப்படுகிறது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வாகன விலைகள் அதிகரித்துள்ளன. தேவையானவர்கள் வாங்குகின்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு முதிர்ச்சியான அரசியல் தலைவர்.அவரின் ஆலோசனையை பெற்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்..

ஷம்ஸ் பாஹிம்

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை