கூட்டமைப்பு தலைவரை இழிவுபடுத்தும் யூடியூப் காணொளி தொடர்பில் உடனடி நடவடிக்கை அவசியம்

சபாநாயகரிடம் சுமந்திரன் முறைப்பாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்ற வீடியோ பதிவு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறுவதையும் தாண்டி ஓர் இழிவான செயல் என்பதால் இந்த வீடியோ பதிவை வெளியிட்ட ஊடகத்துக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இது குறித்து சிறப்புரிமை கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். இதில் அவர் மேலும் கூறியதாவது,

தனது முழங்காலிலுள்ள பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுவருகின்ற இரா.சம்பந்தன் பாராளுமன்ற ஊழியர்களின் உதவியுடன் தனது பாராளுமன்ற ஆசனத்தில் வந்தமர்வதை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூகவலைத்தளத்தினூடாக பகிர்ந்திருப்பதை கண்டிகிறோம்.

நியாயமாக சிந்திக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சார்பாக இந்த சிறப்புரிமை கேள்வியை எழுப்புகிறேன். இது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறுவதையும் தாண்டி ஓர் இழிவான செயலாகும். எனவே, வீடியோ பதிவு செய்த பாராளுமன்ற உறுப்பினரை அடையாளம் கண்டு அவருக்கு எதிராகவும் அதனை வெளியிட்ட "Batti TV" என்ற வலைத்தளம், முகநூல் மற்றும் Youtube பக்கங்களை நிர்வகிப்போருக்கு எதிராகவும் உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை வலியுறுத்தினார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Sat, 08/07/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை