கொரோனா மரணங்களின் எண்ணிக்ைகயில் சந்தேகம்!

ஐ.ம.ச கட்சி மயந்த திஸாநாயக்க MP

கொவிட்19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, கொவிட்19 தொற்றினால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியிடப்படும் தகவல்களில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினர் குறிப்பிடும் ஆலோசனைகளை புறக்கணித்து அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கம் தற்போது தீவிரமடைந்துள்ளதற்கு அரசாங்கத்தின் அலட்சியப் போக்கே முக்கிய காரணியாக உள்ளது.

அரசியல் தேவைக்கமைய சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகள் சந்தர்ப்பத்திற்கேற்ப தளர்த்தப்பட்டன. இதன் விளைவை நாட்டு மக்கள் இன்று எதிர்க்கொள்கின்றனர்.

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசி வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது.

கடந்த காலங்களையும் விட தற்போது வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. நாட்டை ஒருவார காலத்துக்கேனும் முடக்குமாறு சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளதை புறக்கணித்து அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.

ஜனாதிபதி குறிப்பிடும் அனைத்து விடயங்களையும் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் என கருத முடியாது. கொவிட் 19 தொற்றாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். வீடுகளில் இறப்பவர்களை கொவிட்19 தொற்றினால் இறப்பவர்கள் என்று கருத வேண்டாமென அரசியல்வாதிகள் பொதுச் சுகாதார சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

தற்போது சுகாதார சேவை மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளுக்கமைய செயற்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகமும்,கொவிட் -19 வைரஸ் தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை உண்மைத் தன்மையுடன் வெளியிடப்படுகிறதா? என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க அரசாங்கம் சுகாதாரத் தரப்பினரது கருத்துக்களுக்கும், தீர்மானங்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை அரசியல் கோணத்திலிருந்து இல்லாதொழிக்க முடியாதென்றார்.

 

 

Wed, 08/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை