காபூல் விமானநிலையத்தில் மற்றொரு தாக்குதல் வாய்ப்புப் பற்றி எச்சரிக்கை

அமெரிக்கா இறுதிக் கட்ட வெளியேற்ற நடவடிக்கை

காபூல் விமானநிலையத்தில் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அவ்வாறான ஒரு தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற வாய்ப்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘குறிப்பிடத்தக்க, நம்பத்தகுந்த அச்சுறுத்தல்’ காரணமாக விமானநிலையத்திற்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் இருந்து அனைத்து அமெரிக்க பிரஜைகளையும் வெளியேறும்படி அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

ஆப்கானில் தமது வெளியேற்ற நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்வதோடு பிரிட்டன் துருப்புகள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை விமானநியைத்திற்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் சுமார் 170 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அரசுக் குழுவின் உள்ளூர் பிரிவான கொரசன் மாகாண இஸ்லாமிய அரசு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பு கூறியுள்ளது.

இதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஐ.எஸ் குழுவின் மூத்த உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த இருவரும் திட்டங்களை வகுப்பவர்கள் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்துபவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் காபூல் விமானநிலைய தாக்குதலுக்கு இவர்கள் நேரடி தொடர்புடையவர்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.

‘இந்தத் தாக்குதல் இறுதியானதாக இருக்காது. இந்த கொடூரமான தாக்குதலுக்கு தொடர்புடையவர்களை நாம் வேட்டையாடி பதில் கொடுப்போம்’ என்று கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் பைடன் தெரிவித்தார்.

ஆப்கானில் இயங்கும் மிகக் கொடிய மற்றும் வன்முறை மிக்க ஜிஹாத் குழுவாக ஐ.எஸ் பார்க்கப்படுகிறது. இது தற்போது ஆப்கானை கைப்பற்றி இருக்கும் தலிபான்களில் இருந்து பல விடயங்களில் மாறுபட்டு காணப்படுகிறது. போர்க்களத்தை கைவிட்டு அமெரிக்காவுடன் அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டியது குறித்து தலிபான்களை இந்தக் குழு சாடுகிறது.

அமெரிக்காவின் வான் தாக்குதலை கண்டித்திருக்கும் தலிபான்கள், அமெரிக்கா அது பற்றி தம்மிடம் முதலில் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்று தலிபான் பேச்சாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் அடுத்த சில நாட்கள் மிக ஆபத்தானதாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானநிலையத்தில் இருந்து படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் அங்கு 5,800 துருப்புகள் இருந்த நிலையில் நேற்று அது 4,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க துருப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும் இந்த நடவடிக்கையை முடித்துக் கொள்ளும் நேரம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் மேற்கத்தேய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸுக்கு தெரிவித்தார்.
விமானத்தில் அழைத்துச் செல்வதிற்கு 1,000க்கும் சற்று அதிகமானவர்களே தற்போது உள்ளனர் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு இறுதிக் கெடுவை வழங்கிய நிலையில் தமது தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பொறியியலாளர்கள் விமானநிலையத்தின் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். விமானநிலையத்தை சூழ தலிபான்கள் சோதனைச்சாவடிகளை அதிகரித்திருப்பதோடு அதன் வழியே உள்ளே செல்வதற்கு பெரும்பாலான ஆப்கானியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக ஏ.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த வெளியேற்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இதுவரை 110,000க்கும் அதிகமான வெளிநாட்டினர் மற்றும் ஆப்கானியர்கள் காபூல் விமானநிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இத்தாலியின் கடைசி விமானம் ஆப்கானில் இருந்து ரோமை அடைந்தது. சுமார் 5,000 ஆப்கான் பிரஜைகள் வெளியேற்றப்பட்டதாக இத்தாலி குறிப்பிட்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையாகும்.
ஓகஸ்ட் 17 தொடக்கம் 2,800க்கும் அதிகமானவர்களை வெளியேற்றியதாக பிரான்ஸ் குறிப்பிட்டிருப்பதோடு, சுமார் 4,000 ஆப்கானியர்களை ஏற்றதாக ஜெர்மனி தெரிவித்தது.
இதேவேளை அனைவரையும் மீட்க முடியாதது வேதனை தருவதாக பிரிட்டன் இராணுவ ஜெனரல் சேர் நிக் கார்டர் தெரிவித்துள்ளார்.
வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவியாக காபூலில் பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்க ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுக்கப்போவதாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

 

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை