கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாட்டின் முக்கிய வைத்தியசாலைகள் கொரோனா நோயாளர்களால் நிரம்பல்

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாட்டின் முக்கிய வைத்தியசாலைகள் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக அந்த வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி வைத்தியசாலைகளில் தற்போதுள்ள வார்ட்டுகளுக்கு மேலதிகமாக மேலும் பல வார்ட்டுகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் அந்த நோயாளர்களில் பெரும்பாலானோருக்கு ஒட்சிசனுக்கான அவசியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மேற்படி வைத்தியசாலைகளில் டாக்டர்கள், தாதிமார் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் பெருமளவிலானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் டாக்டர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் 350 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அங்கு 24 தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 30ற்கும் மேற்பட்ட வைரஸ் தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதற்கிணங்க தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளால் நிரம்பியுள்ளதாகவும் அந்த வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தினமும் பத்துக்கும் பதினைந்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மரணமடைவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 700 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களும் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையான ஐ டி எச். வைத்தியசாலையில் 240 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள், காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் 222 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள், கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையில் 300 கொரோன வைரஸ் தொற்று நோயாளிகள், வெளிசர தேசிய நோய்கள் தொடர்பான விஞ்ஞான நிறுவனத்தில் 182 கொரோன வைரஸ் தொற்று நோயாளிகளும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த வைத்தியசாலைகளில் பணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Mon, 08/30/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை