'பிள்ளைகளை தாம் வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை'; யுனிபீல்ட் மக்கள் சுடரேற்றி சத்தியம்

சிறுமி ஹிசாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு பேரணி ஒன்று நேற்று கொட்டகலை பகுதியில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹிசாலினியின் மரணத்திற்கு மெழுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் தமது பிள்ளைகளை தாம் வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை என மெழுவர்த்தி சுடரின் முன்னால் சத்தியம் செய்தனர். ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியில் யுனிபீல்ட் சந்தியில் இந்த கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. இந்த பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், என சுமார் 300ற்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

கொட்டும் மழையிலும் பதாதைகளை ஏந்தி கோசமிட்டு ஹிசாலினிக்கான நீதியை வேண்டி நின்றனர்.
இந்த பிரதேசத்தில் இருந்து சட்டத்தரணியாக உள்ள தோட்ட தொழிலாளியின் பிள்ளையான சட்டத்தரணி நேரு கருணாகரன் தமது பிரதேசத்தில் பின்வரும் மூன்று விடயங்களை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார்.

* தமது பிரதேசத்தில் இருந்து 18 வயதுக்கு குறைந்தவர்கள் தொழிலுக்கு சென்றிருந்தால் அவர்களை சட்டரீதியாக உடனடியாக திருப்பி அழைப்பது.

*18 வயதுக்கு குறைந்தவர்கள் பாடசாலை இடை விலகி இருந்தால் அவர்களை மீள பாடசாலையில் சேர்த்து கல்வி கற்க வழி செய்வது. அல்லது தொழில் முறை கல்வியை பெற்றுக் கொடுப்பது.

*எமது பிரதேசத்தில் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவார்களாக இருந்தால் அது தொடர்பாக உடனடியாக சிறுவர் பாதுகாப்பு சபைக்கு தெரியப்படுத்துவது.

மேலும் இந்த தீர்மான்களுக்கு தாம் கட்டுப்பட்டு தமது பிள்ளைகளை இனி வீட்டு வேலைக்கு அனுபுவதில்லை என்று பெற்றோர்களும் கருத்து தெரிவித்ததுடன் உறுதியும் எடுத்துக் கொண்டனர்.

கொட்டகலை தினகரன் நிருபர்

 

 

Mon, 08/02/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை