எதிர்க்கட்சித் தலைவரது ஆசிர்வாதத்துடன் ஆசிரியர்களது போராட்டம் முன்னெடுப்பு

கொரோனா பரவலை ஏற்படுத்தும் செயலென குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆசீர்வாதத்துடன் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தச் செய்து கொரோனாவை பரப்பிக் கொண்டிருக்கின்றார் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை பார்வையிடுவதற்கு தனக்கு அனுமதி வழங்கப்படாமை குறித்து பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட சிறப்புரிமை பிரச்சினை தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

துறைமுக அதிகாரசபையின் பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியிலும் சில நிறுவனங்களுக்குள் செல்லும் போது அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதன்படி துறைமுக அதிகாரசபைக்குள் செல்ல முன்னர் மூன்று நிறுவனங்களிடம் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். துறைமுக அதிகாரசபை , கடற்படை மற்றும் சுங்கம் ஆகிய நிறுவனங்களிடம் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன்படி எதிர்க்கட்சித் தலைவர் அங்கு செல்லும் போது எனக்காவது தொலைபேசி அழைப்பை மேற்கொள்வது நல்லதே.

இந்தப் பிரச்சினை ஏற்பட்டது நல்லதே. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிரதான உரிமை பாராளுமன்றத்திற்குள் வருவதே ஆகும். அன்று மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக எரிபொருள் தொடர்பான பிரச்சினையின் போது மிதி வண்டியில் வரும் போது பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்காதவர்களே இன்று கதைக்கின்றனர்.

சுகாதார அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கொரோனா தொடர்பில் கேள்விகளை கேட்கிறார். அதனை கேட்கும் இதேவேளையில் உங்களின் பூரண ஆசீர்வாதத்துடன் ஒவ்வொரு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஆனால் இங்கு கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் நீங்கள் கதைக்கின்றீர்கள். உங்களின் ஆசீர்வாதத்துடன் எல்லா இடங்களிலும் கொரோனா பரப்பப்படுகின்றது.

நீங்கள் துறைமுகத்திற்குள் வரும் போது கொரோனாவை பரப்புவதற்காகவா வருகின்றீர்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. முழு துறைமுகத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை இல்லாமல் செய்வதற்காகவா வருகின்றீர்கள். இன்று தேசிய தொற்று நிலைமை தொடர்பில் கதைத்துக்கொண்டு முழுமையாக அதனை குழப்புகின்றீர்கள் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Fri, 08/06/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை