மாணவர்களை பணயக் கைதிகளாக்கி அற்ப அரசியலில் ஈடுபட வேண்டாம்

தொழிற்சங்கங்கள், கட்சிகளிடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் கோரிக்கை

தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பணயக் கைதிகளாக வைத்து அற்ப அரசியலில் ஈடுபட வேண்டாம் என ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணாந்து தெரிவித்தார்.

ரஷ்யாவின் லெனின், குழந்தைகளுக்கு சிறந்ததை கொடுக்கும் படி சொன்னாலும், இலங்கையில் ஸ்டாலின் போராட்டம் நடத்தி கல்விக்கு இடையூறு செய்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

ஆசிரியர் பிரச்சினையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்த்து வைப்பார் என்று தெரிந்தும், இந்த தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கி போராடுவதன் நோக்கம் தங்களினால் தான் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்தது என ஆசிரியர்களுக்கு காண்பிப்பதற்காகவேயாகும் .

ஆசிரியர்கள் வீதிகளில் இறங்கி போராடி அவர்களின் வாழ்க்கையையும் பிள்ளைகளின் கல்வியையும் சீர்குலைத்து வருகின்றனர்.

மூன்று சதவீத கட்சி, பிள்ளைகளின் கல்வியை சீர்குலைப்பது இது முதல் முறை அல்ல.வரலாற்றில் கலவரங்கள் உருவாக்கி எத்தனை அதிபர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்களை கொலை செய்துள்ளனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவாக தெரிவித்துள்ளனர். சம்பள முரண்பாட்டு பிரச்சினை 24 வருடங்களாக உள்ளது. இந்த அரசுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன, இந்த பிரச்சனைகளை நாமே தீர்த்துக்கொள்வோம்.இந்த பிரச்சனையை நாங்கள் மற்றொரு அரசாங்கத்திற்கு மிகுதி வைக்க விடமாட்டோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்பதை அறிந்திருந்தும் கூட, இந்த தொழிற்சங்கங்கள் இந்த பிரச்சினைகளைத் தாங்கள் தீர்த்ததாக காட்ட தெருவில் இறங்கியுள்ளன. நல்லாட்சியில் இவர்கள் வாய் திறக்கவில்லை.அந்த அரசாங்கங்கத்தில் எதுவும் செய்ய முடியாது என்று அவர்களுக்கு தெரியும். எவ்வாறாயினும், எங்கள் ஜனாதிபதி பிரச்சினையைத் தீர்க்க முயன்றபோது, ​​அவர் தெருக்களில் இறங்கி கொவிட்டுக்கு மத்தியில் பாதாகைகளை ஏந்தி நிற்கின்றனர். இவர்கள் நான்காவது அலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

கட்சியையோ தொழிற்சங்கத்தையோ பற்றி யோசிக்காமல் நாட்டை பற்றி சிந்தியுங்கள்.

இது போன்ற நேரத்தில் ஆர்ப்பாட்டம் செய்யத் தேவையில்லை. நம் குழந்தைகளின் கல்விக்காக தம்மை அர்ப்பணித்தால், தொழிற்சங்கங்கள் மற்றும் இந்த போராட்டங்களின் பின்னணியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு புண்ணியம் கிடைத்திருக்கும் .

ரஷ்யாவின் லெனின் குழந்தைகளுக்கு சிறந்ததைக் கொடுக்கும்படி கேட்டார். ஸ்டாலின் இலங்கையில் குழந்தைகளின் கல்வியை சீர்குலைக்கிறார் என்றார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Wed, 08/04/2021 - 08:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை