சம்பவத்தை மறைக்க தொடர் முயற்சி: ஹிஷாலினியின் திடீர் மரணம் படுகொலையாக இருக்கலாம்

நீதவான் முன்னிலையில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் தெரிவிப்பு

சிறுமி ஹிஷாலினியின் சம்பவத்தை மறைப்பதற்கு தொடர்ச்சியாக முயற்சித்துள்ளமைக்கான சாட்சியங்களுள்ளதாக குறிப்பிட்ட பிரதி சொலிஸிட் டர் ஜெனரல் திலிப பீரிஸ், இவ்வாறான பின்னணியில், ஹிஷாலினியின் மரணம், மனித படுகொலையாக இருக்கலாமென்ற சந்தேகம் உள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சிறுமி நீண்ட காலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை, விசேட சட்ட வைத்திய அதிகாரி தலைமையிலான மூவரடங்கிய வைத்திய குழுவினால் நடத்தப்பட்ட இரண்டாவது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட சந்தேகநபர்கள், இச் சம்பவத்தை மறைப்பதற்கு தொடர்ச்சியாக முயற்சித்துள்ளமைக்கான சாட்சியங்களுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டதாக, தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள வைத்தியரினால் பதியப்பட்டுள்ள விடயம் தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில், அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு சென்ற போது, 5000 ரூபா தாள்களுடனான பணத் தொகையொன்றை, ரிஷாத் பதியுதீனின் மனைவி, தரகரிடம் வழங்கியுள்ளமைக்கான சாட்சியங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுமிக்கு வேறொரு இடத்தில் தீ வைக்கப்பட்டு, இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாமென்ற சந்தேகம் உள்ளதாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பியூலன்ஸ் சேவைக்கு அறிவித்த சந்தர்ப்பத்தில், தீக் காயங்களுக்குள்ளானவரின் உடலை குளிர்மையாக வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அம்பியூலன்ஸ் ஊழியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனினும், சம்பவ இடத்திற்கு அம்பியூலன்ஸ் செல்லும் வேளை, ஆலோசனை வழங்கப்பட்ட விதத்தில், எந்த நடவடிக்கைகளும் செய்யப்படவில்லையென எனவும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவத்தின் பின்னர், சிறுமியின் குடும்பத்திற்கு பணம் வழங்குவதாகவும், விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்ட பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸார் இதுவரை செயற்படவில்லையென திலிப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் 06ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன

Wed, 08/25/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை