கலைஞர் கருணாநிதிக்கு கொழும்பில் நினைவஞ்சலி

நாளை மாலை 4.30க்கு பிரைட்டன் ஹோட்டலில்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தை கொழும்பு மாநகரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, ஆமர் வீதி, பிரைட்டன் ஹோட்டல் மண்டபத்தில் இந்த அஞ்சலி கூட்டம் நடைபெறவுள்ளது.

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார். ஆசியுரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ கலாநிதி பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள் நிகழ்த்த வரவேற்புரையை தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் நிகழ்த்துவார்.

தொடக்கவுரை கலைஞர் கலைச்செல்வன் நிகழ்த்த நன்றி உரையினை இலங்கை இந்திய பத்திரிகை தொடர்பாளர் மணவை அசோகன் நிகழ்த்துவார்.

இந்த விழாவில் சிறப்பதிதிகளாக அழைக்கப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மறைந்த முதுபெரும் தலைவர் தமிழறிஞர், கலைஞர் கருணாநிதிக்கு மலர் அஞ்சலி செலுத்துவதுடன் அஞ்சலி தீபத்தை ஏற்றி வைப்பார்கள் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Fri, 08/06/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை