யாழ்.மாவட்டம் கடும் நெருக்கடிக்குள்; வைத்தியசாலைகள் நிரம்பி விட்டன

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,...

எமது வைத்தியசாலை தற்போதைய நிலவரத்தின்படி வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் எல்லாமே கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருக்கின்றன.

எங்களுக்குரிய மிகக் குறைந்த வளங்களுடன் எமது சேவைகளை நாம் முன் கொண்டு செல்கின்றோம். வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மிகுந்த நெருக்கடியை இதனால் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் இங்கு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதனால் வைத்தியசாலை மிகவும் இக்கட்டான கட்டத்தில் உள்ளது.

எமது கோப்பாய் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தில் 420 பேரை பராமரிக்கின்ற வசதிகளே இருந்தும் நேற்று 430 பேருக்கு மேல் அதிகமாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வைத்தியசாலைக்குத் தேவையான ஒக்சிஜன் சிலிண்டர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நாங்கள் இதுவரை ஒக்சிஜன் சிலிண்டரை பெற்றுக்கொள்ள அனுராதபுரத்திற்கு

மட்டுமே சென்றிருந்தபோதும் அங்கும் தட்டுப்பாடு உருவாக நேற்று முதல் கொழும்புக்கும் செல்லுகின்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் வைத்தியசாலைக்கு விபத்து பிரிவிற்கு தினமும் 60 தொடக்கம் 80 பேர் வரையில் அனுமதிக்கப்படுகின்றார்கள் . அவர்களுக்கும் எமது சேவையை வழங்குவதால் கொவிட் நோயாளர்களை கவனிப்பதிலும் நமக்கு சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டியதாக உள்ளது. எனவே இவற்றை குறைக்க வேண்டும் இவற்றை குறைப்பதற்கான ஒரே வழி தேவையற்ற நடமாட்டங்களை குறைக்கவேண்டும்.அத்துடன் ஆடம்பரமான கொண்டாட்டங்கள் தேவையற்ற விழாக்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.நாம் மீண்டும் கூறுவது என்னவென்றால் மக்களாகியநீங்கள் தேவையற்று வெளியில் நடமாடாமல் சமூகப் பொறுப்புடன் சமூக இடைவெளியை பயன்படுத்தி சுகாதார நடவடிக்கைகள் இறுக்கமாக பேணுவது தான் வைத்தியசாலைக்கும் சமூகத்திற்கும் நீங்கள் செய்யும் ஒரே ஒரு நன்மையாக இருக்கும் என்றார்.

யாழ்.விசேட நிருபர்

 
Sat, 08/14/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை