குறுகிய நோக்கங்களுக்காக அதிபர் ஆசிரியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில்

தடுத்து நிறுத்துமாறு IGPக்கு தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி கடிதம்

 

ஆசிரியர்கள் அதிபர்கள் மேற்கொள்ளும் பணி பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டமானது மக்கள் எதிர்ப்பை சந்திக்கும் நிலையில் அது அமைதிக்கு குந்தகமாக அமையும் என்றும் அதனை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

மேற்படி ஆர்ப்பாட்டங்களில் அதிபர்கள் ஆசிரியர்கள் என்ற போர்வையில் சில அரசியல் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்று வருவதாக மேற்படி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த வகையில் இது ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்க போராட்டம் என்ற வகையில் நடத்தப்படும் குறுகிய நோக்கங்களுக்கான ஆர்ப்பாட்டமாகவே கருத முடிவதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் மேற்படி கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவா பத்திரன கையொப்பமிட்டு பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

20 வருடங்களுக்கு மேலாக தொடரும் ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க செயற்பட்டு வரும் நிலையில் சுயநலமாக தமது தொழில் உரிமை என்ற போர்வையில் ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பானது பணி பகிஷ்கரிப்பை மிஞ்சிய வேறு ஒரு குறுகிய நோக்கமாகவே கருதமுடிகிறது.

பணிப்பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டம் என்ற வகையில் பல்வேறு நகரங்களிலும் தினமும் கூடும் நபர்கள் ஆசிரியர்கள், அதிபர்கள் மட்டுமன்றி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அவற்றில் காணப்படுகின்றனர் என்பதை நாம் பொறுப்புடன் கூற விரும்புகின்றோம்.

ஆசிரியர்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் பணிப் பகிஷ்கரிப்பு மக்களின் எதிர்ப்பை சந்திப்பது உடன் மக்கள் அமைதியாக வாழும் சூழ்நிலையையும் சீர்குலைக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக மாணவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் ஒன்லைன் மூலமான கல்வியை மேற்கொண்டு வந்த நிலையில் ஆசிரியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு அவர்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

தமது தொழிற்சங்க உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக மாணவர்களை பகடைக்காய்களாக வைத்து மேற்கொள்ளப்படும் பணிப்பகிஷ்கரிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 08/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை