மௌன்ஜீன் ஆற்றில் மாணிக்கக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு

வட்டவளை மௌன்ஜீன் ஆற்றுப்பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் மாணிக்கக்கல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்ட மக்கள் நேற்று தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக்கைத்தொழில் திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்படவிருக்கும் குறித்த வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த தோட்ட மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருந்த தருணத்தில் குறித்த தோட்டத்திற்கு வருகை தந்த வட்டவளை பொலிஸார் அனுமதியின்றி போராட்டத்தை முன்னெடுக்கமுடியாது என அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்தே தோட்ட தொழிற்சாலைக்கு முன் கூடிய மக்கள் மாணிக்கக்கல் அகழ்விற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர். குறித்த பகுதி ஒரு மண்சரிவு பகுதி என்பதை கூட பார்க்காமல் தற்போது மாணிக்கக்கல் அகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளும் பகுதியில் பிரதான வீதி காணப்படுகின்றது. மேலும் இப்பகுதியிலேயே புகையிரத நிலையமும் அமைந்துள்ளது.இந்த பாதையும் புகையிரத நிலையமும் இருப்பதனால்தான் நாங்கள் வெளியில் சென்று எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றோம்.

மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளும் பாதையூடாகவே பாடசாலைக்கு செல்கின்றனர். எதிர்வரும் காலங்களில் வேலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எமது பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக அனுப்புவது. நாட்டில் சிறுவர்களுக்கு எதிராக பல்வேறு துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன. அப்படி இருக்கின்றபோது எமது பிள்ளைகளை எவ்வாறு குறித்த வீதியூடாக அனுப்புவது.

மேலும் அப்பாதை வழியாகவே எமது தோட்டத்தில் இருக்கும் ஆசிரியர்கள் வருகின்றனர்.அது மாத்திரமன்றி இங்கு காணப்படும் புகையிரத நிலையத்திற்கும் பிரதான பாதையாகவும் காணப்படுகின்றது.மேலும் நோயாளர்களையும் அப்பாதையூடாகவே கொண்டு செல்கின்றோம்.

மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்போகின்ற விடயம் தோட்ட மக்களாகிய எங்களுக்கு இதுவரை தெரியாது. எனவே இப்பாதை எவ்வித பாதிப்பின்றி எங்களுக்கு வேண்டும் என தெரிவித்தனர்.

அரசாங்கம் குறித்த வேலைத்திட்டத்திற்கு எவ்வாறு அனுமதி வழங்கியது என்பது எங்களுக்கு தெரியாது.எனவே மாணிக்கக்கல் அகழ்வு விடயத்தில் அரசாங்கம் எடுத்த தீர்மானம் பிழையான விடயமாகும் என மக்கள் பலரும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நாம் பல்வேறு நபர்களுக்கு அறிவித்திருந்தோம். குறிப்பாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் அமைச்சர்,ஜனாதிபதி செயலகம்,சுற்றாடல் அமைச்சு ஆகிய தரப்பினருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

குறித்த வீதியூடாக இன்னும் சிறிய மண்சரிவுகள் ஏற்பட்டவண்ணமே காணப்படுகின்றது.தற்போது பெய்யும் மழைகாரணமாக தொடர்ச்சியாக மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் காணப்படுகின்றது.

மாணிக்கல் அகழ்வு மேற்கொள்ளும் போது இப்பாதை மேலும் சரியகூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

எனவே குறித்த வேலைத்திட்டத்தை நிறுத்துமாறு தோட்ட மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

(கினிகத்தேனை தினகரன் நிருபர், மஸ்கெலியா தினகரன் நிருபர்)

 
Wed, 08/11/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை