ஆப்கானில் ஐந்து நாட்களுக்குள் 8 நகரங்கள் தலிபான் வசம்

தலிபான்கள் ஆப்கானில் மேலும் இரண்டு நகரங்களை கைப்பற்றிய நிலையில் அந்தக் குழு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கைப்பற்றிய மாகாணத் தலைநகரங்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.

தெற்கு மாகாணத்தின் பராஹ் நகர் மற்றும் வடக்கு மாகாணமான பக்லானின் புலே கும்ரி ஆகிய நகரங்களே கடந்த செவ்வாய்க்கிழமை தலிபான்களிடம் வீழ்ந்துள்ளன. உள்ளூர் தரப்புகள் தலிபான்களின் முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளன.

‘பாதுகாப்பு படையினருடன் சிறிய மோதலுக்கு பின்னர் இன்று மாலை (செவ்வாய்க்கிழமை) பராஹ் நகருக்குள் தலிபான்கள் நுழைந்தனர். அவர்கள் ஆளுநரின் அலுவலகம் மற்றும் பொலிஸ் தலைமையகத்தை கைப்பற்றினர்’ என்று பராஹ் மாகாண சபை உறுப்பினரான ஷஹ்லா அக்பர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

தலிபான்கள் மாகாணத்தின் மத்திய சிறைச்சாலையையும் கைப்பற்றிவிட்டனர் என்று பாராளுமன்ற உறுப்பினரான அப்துல் நஸ்ரி பராஹி தெரிவித்தார்.

ஆப்கானின் தென்மேற்கில் தலிபான்கள் வசமாகும் இரண்டாவது நகராக பராஹ் உள்ளது. இதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை அண்டை மாகாணமான நிம்ருஸை தலிபான்கள் கைப்பற்றினர்.

பராஹ்வை கைப்பற்றியதன் மூலம் தலிபான்களுக்கு ஈரானுடனான மற்றொரு எல்லைக் கடவை கிடைத்துள்ளது.

உள்ளூர் பாதுகாப்புப் படையினர் நகருக்கு வெளியில் இருக்கும் இராணுவ முகாம் ஒன்றை நோக்கி பின்வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.

மறுபுறம் தலைநகர் காபுலில் இருந்து வடக்காக சுமார் 200 கி.மீ. தொலைவில் இருக்கும் பக்லான் மாகாணத் தலைநகர் புலே கும்ரியையும் தலிபான்கள் செவ்வாயன்று கைப்பற்றியதாக அந்தப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இராணுவத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

‘சுமார் இரண்டு மணி நேர சண்டையில் இராணுவம் முறியடிக்கப்பட்டு பின்வாங்கினர்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் மமூர் அஹமதுசாய் தெரிவித்தார்.

புலே கும்ரியை கைப்பற்றியதன் மூலம் வடக்கு மாகாணத்தின் மூன்று எல்லை பகுதிகளை தன்வசமாக்க முடிந்துள்ளது.

இந்த வார ஆரம்பத்தில் குந்துஸ் மற்றும் தகார் நகர்களை தலிபான்கள் கைப்பற்றினர். இதன்மூலம் காபுல் தொடக்கம் வடகிழக்கு மாகாணமான பதக்ஷான் வரையான ஒட்டுமொத்தமான 378 கிலோமீற்றர் வீதியும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த வீதி பயணிகள், வர்த்தக வாகனங்கள் மற்றும் நார்கோடிக் உட்பட சட்டவிரோத பொருட்களை எடுத்துச் செல்லும் பிரதான பாதையாக உள்ளது. இதன்படி தலிபான்கள் ஒருவார காலத்திற்குள்ளேயே ஆப்கானின் 34 மாகாணத் தலைநகரங்களில் எட்டு தலைநகரங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்கள் தற்போது ஆப்கானின் 65 வீதமான பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 11 மாகாணத் தலைநகரங்களை கைப்பற்றும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் நாட்டின் வடக்கில் இராணுவத்திற்கு வழக்கமாக உள்ள ஆதரவை முறியடிக்க அவர்கள் முயல்வதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் 20 ஆண்டு இராணுவ நடவடிக்கைக்கு பின் அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு படையினர் ஆப்கானில் இருந்து வெளியேறும் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையிலேயே தலிபான்கள் கடந்த மே மாதம் தொடக்கம் தாக்குதல்களை ஆரம்பித்தனர். அது தொடக்கம் அந்தக் குழு கிராமப் பகுதிகளில் முன்னேற்றம் கண்ட நிலையில் தற்போது நகரங்களை இலக்கு வைத்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தலிபான்கள் தற்போது நாட்டின் வடக்கில் ஆறு மாகாணங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு தென்மேற்கில் நிம்ருஸ் மாகாணத் தலைநகர் சரன்ஜ் நகரையும் கைப்பற்றியுள்ளனர்.

அந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரான மசாரே சரீபை தாம் நெருங்கிவிட்டதாக தலிபான்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தனர். இந்த நகர் தலிபான்களிடம் சென்றால் நாட்டில் வடக்கில் அரசு தனது கட்டுப்பாட்டை இழந்து விடும் நிலை உள்ளது.

மறுபுறம் ஈரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனான எல்லைச் சாவடிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளர்.

எல்லைச் சாவடிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் வரும் வாகனங்கள் கொடுக்கும் சுங்க வரி மூலம் தலிபான்கள் பெருமளவு பொருள் ஈட்ட முடியும். இந்த அமைப்பு எல்லைச் சாவடிகளை மட்டுமல்லாமல் நகரங்களை இணைக்கும் முக்கிய வீதிகளையும் கைப்பற்றியுள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அண்மைய மாதங்களில் ஆப்கானில் சுமார் 400,000 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இதில் ஒப்பீட்டளவில் பாதுகாப்புக் கொண்ட தலைநகர் காபுலில் சிலர் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

மோதலில் சிக்குண்ட 4,000க்கும் அதிகமான மக்களுக்கு கடந்த பத்து நாட்களில் மருத்துவ சிகிச்சை அளித்ததாக செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது. தலிபான்கள் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் தமது துருப்புகளை வாபஸ்பெறுவதை இட்டு கவலை அடையவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்டு தமது நாட்டுக்காக போராடும்படி ஆப்கான் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், வான் உதவி வழங்குவது, இராணுவத்திற்கு சம்பளம் வழங்குவது மற்றும் ஆப்கான் படைக்கான உணவு மற்றும் உபகரணம் வழங்குவது போன்ற ஆப்கானுக்கான கடப்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பைடன் தெரிவித்தார்.

ஆனால் இந்தப் போரை அவர்கள் தான் செய்ய வேண்டும் என்று பைடன் வலியுறுத்தியுள்ளார்.

Thu, 08/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை