கொவிட் கட்டுப்படுத்தல், நிவாரணங்களுக்காக ரூ. 700 பில்லியன் செலவு

அரச ஊழியர் சம்பளம், கொடுப்பனவுகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் இதுவரை ரூ.700 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நாட்டின் மொத்த தேசிய வருமானமான 1380 பில்லியன் ரூபாவில் அரைவாசியாகுமென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இவ்வளவு பணம் செலவழித்த போதிலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கவோ அல்லது அவர்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்கவோ அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், அரச ஊழியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். இதற்கு அப்பால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சும் பாரியளவான நிதியை செலவிட்டுள்ளது.

பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய சிகிச்சை மையங்கள் கட்டுதல், இரண்டு வாரங்களுக்குத் தேவையான 10 ஆயிரம் ரூபா நிவாரணப் பொதிகளை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காகவும் அரசாங்கம் பாரிய அளவிலான நிதியை செலவிட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இவ்வளவு பணம் செலவழித்துள்ள போதிலும், வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு கடன் தவணைகளை செலுத்துவதன் மூலம் நாட்டின் பிற பொருளாதார செயற்பாடுகளையும் அரசாங்கம் சமநிலைப்படுத்தி வருகிறது.

சமுர்த்தி சலுகைகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 கோடி (ரூ.50 பில்லியன்), இலவச மருந்துக்கு ரூ.90 பில்லியன், ஊனமுற்ற போர் வீரர்களுக்கு ரூ.4 பில்லியன், ஓய்வூதியத்துக்காக ரூ.25,000 கோடி, உர மானியத்திற்காக ரூ.35 பில்லியன் மற்றும் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் உட்பட பல்வேறு மானியங்களுக்கு 7,000 கோடியை (ரூ. 70 பில்லியன்) அரசு செலவு செய்துள்ளது. மொத்தமாக தொற்றை கட்டுப்படுத்த ரூ.56 பில்லியனும் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க 70,000 கோடிக்கும் அதிகமான தொகையையும் அரசாங்கம் செலவு செய்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலைநோக்கு வழிகாட்டல் மற்றும் முறையான பொருளாதார மேலாண்மை காரணமாக, தினசரி அடிப்படையில் நுகர்வோர் பொருட்களின் விலைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், தொற்றுநோயை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

முப்பது வருடப் போரின் போது கூட இதுபோன்ற பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளவில்லை. தொற்றுநோயிலிருந்து கடந்த ஒன்றரை வருடமாக மக்களைக் காப்பாற்றவும், பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் முடிந்துள்ளமையையிட்டு ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சிசெய்த எந்தவொரு அரச தலைவரும் இவ்வாறு உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கவில்லை. ஆகவே, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து பின்பற்றி தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை