லெபனான் மீது 7 ஆண்டுகளில் இஸ்ரேல் முதல் வான் தாக்குதல்

இரண்டாவது நாளாகவும் ரொக்கெட் தாக்குதல் இடம்பெற்றதை அடுத்து கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக அண்டை நாடான லெபனான் மீது நேற்று வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

‘நேற்றுக் காலை (வியாழக்கிழமை) இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன’ என்று இஸ்ரேலிய விமானப்படை ட்விட்டரில் தெரிவித்தது.

‘பதில் நடவடிக்கையாக ஏவுதளங்கள் மற்றும் ரொக்கெட் வீசுவதற்கு பயன்படுத்தப்பட்ட இடங்களின் உட்கட்டமைப்பை இலக்கு வைத்து வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கடந்த காலத்தில் ரொக்கெட் வீச பயன்படுத்தப்பட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் பலஸ்தீன போராளிகளை இலக்கு வைத்தும் சிரியாவில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா சந்தேக நபர்களை இலக்கு வைத்தும் அடிக்கடி வான் தாக்குதல்களை நடத்தியபோதும் லெபனானில் 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவ்வாறான தாக்குதல் ஒன்றை நடத்துவது இது முதல்முறை என்று இஸ்ரேல் விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

எல்லையில் இருந்து சுமார் ஏழு மைல்கள் தொலைவில், மஹ்முதியா நகருக்கு வெளியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.40 மணி அளவில் இஸ்ரேல் விமானங்கள் இரு வான் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் லெபனானின் அல் மனார் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா அமைதிப் படை இரு தரப்பையும் அமைதி காக்கும்படி கோரியுள்ளது.

Fri, 08/06/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை