60 வயதுக்கு மேற்பட்ட சகலரும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவும்

சர்வ மதத் தலைவர்கள் கூட்டாக மக்களிடம் வேண்டுகோள்

இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட சகலரும் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என சர்வ மதத்தலை வர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொவிட்19 தடுப்புக்கு ஒரே தீர்வு தடுப்பூசியை பெற்றுக் கொள்தென உலக சுகாதாரஅமைப்பு உறுதி செய்துள்ள பின்னணியில் இலங்கையும் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் தடுப்பூசியை தயாரிக்கும் நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை பாரியளவில் பெற்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது என தெரிவித்துள்ள அவர்கள்,ஆனாலும் போலி சித்தாந்தவாதிகள் தமக்குரிய தடுப்பூசிகளை இதுவரை பெறவில்லை. அது கவலைக்குரிய விடயமாகும். வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்மட்டத்தில் பேண வேண்டும். அதன் மூலம் மரண விகிதத்தை குறைப்பதே தடுப்பூசி வழங்களின் நோக்கமென்பதால் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக அதனை பெற வேண்டும் என தடுப்பூசியை பெற்றுக் கொள்வது தொடர்பில் சர்வ மதத்தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அஸ்கிரிய பிரிவின் அனு நாயக்க வேண்டருவே உபாலி தேரர் தெரிவிக்கையில்,

கொவிட்19 இன, மத, கட்சி பேதமின்றி அனைவரது உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் யாராவது தொற்றை அரசியல் இலாபத்துக்காக மாற்றிக் கொண்டிருந்தால் அது கவலைக்குரிய விடயமாகும்.

இந்த கஷ்டமான நிலைமையில் கட்சி, எதிர்க்கட்சி அனைவரினதும் பொறுப்பு அனைத்து அரசியல் கொள்கைகளையும் புறந்தள்ளி தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டியதாகும்.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பிக்குகள் பலர் மரணமடைந்துள்ளனர். அதேபோன்று ஏனைய மதத் தலைவர்களும் இறந்துள்ளனர். அரசியல் தலைவர்களும் இந் நிலைமைக்கு ஆளாகி உள்ளார்கள். இன மத கட்சி பேதமின்றி வைரஸ் தாக்குகின்றது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படாமல் இந்த சவாலில் வெற்றி பெறமுடியாது. அரசங்கத்துக்கு போன்று மக்களுக்கும் பெரும் பொறுப்புண்டு. நாம்அனைவரும் தற்போதைய நிலைமையில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியுள்ள என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச இந்து சம்மேளன செயலாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் (பாபு சர்மா) தெரிவிக்கையில்,

ஜனாதிபதி உள்ளிட்ட அரசு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து நாட்டு மக்களை தொற்றிலிருந்து காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்து வருகின்றது. மக்களை இந்த தொற்றிலிருந்து விடுபடச் செய்து வளமான வாழ்வை சாதாரணமாக மேற்கொள்வதற்கும் தேவையான சூழலை ஏற்படுத்துவதே அரசின் தேவையாக உள்ளது. இந்த முயற்சியில் இன, மத, குல, கட்சி பேதமில்லை. அதனால் கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலி கருத்துகளுக்கு இடமளிக்காது இந்த தடுப்பூசியை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்யாவிட்டால் எமது மரணம் விரைவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமைக்கான அனைத்து மத அமைப்பின் இணைத் தலைவர் அல்ஹாஜ் ஹஸன் மௌலானா தெரிவிக்கையில்,

இலங்கையில் மாத்திரமல்ல, உலக மக்கள் அனைவரும் கொவிட்19 தொற்று காரணமாக மரண பயத்தில் உள்ளார்கள்.இந்த கொவிட்19 தொற்றால் இலங்கை மட்டுமன்றி உலகின் பலம் வாய்ந்தவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.எமது நாட்டை இன, மத, குல பேதமின்றி இந்த தொற்றிலிருந்து காப்பாற்ற ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதார அதிகாரிகள் அனைவரும் மிகவும் அக்கறையுடன் சிரமமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு இது தொடர்பான நிபுணர்கள், மருத்துவர்கள் அறிமுகம் செய்துள்ள அனைத்து வகை தடுப்பூசிகளையும் மிகவும் சிரமப்பட்டு கொண்டு வந்து மக்களை காப்பாற்ற இந்த தடுப்பூசி வழங்கலை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. தற்போது இலட்சக்கணக்கான தடுப்பூசிகளை கொண்டு வந்துள்ளனர். அதனால் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட நிபுணர்கள் அனுமதி அளித்துள்ள இந்த தடுப்பூசியை எவ்வித பயமும் சந்தேகமுமின்றி பெற்றுக்கொள்ளமுடியும். போலியான வதந்திகளை நம்பி நாட்டை பின்னோக்கி செல்ல விடாமல் இத் தடுப்பூசியை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தடுப்பூசியை பெறுவதன் மூலம் மக்களின் உயிர் பாதுகாக்கப்படுவதோடு நாட்டையும் வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க முடியும். மதத் தலைவன் என்ற ரீதியில் நான் கூறுவது இஸ்லாம் மதத்துக்கு அமைய உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வது நரகத்திற்கு செல்லும் செயலாகும். நீங்கள் தடுப்பூசிக்கு பயந்து வதந்திகளுக்கு ஏமாந்து தடுப்பூசியை பெறாவிட்டால் நீங்கள் கொரோனாவுக்கு இரையாக வேண்டி நேரிடுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ நடவடிக்கைகள் தொடர்பான இணைப்பாளர், அருட்தந்தை கலாநிதி சிஸ்டர்ஸ் குருகுலசூரிய தெரிவிக்கையில்,

நாம் உண்பதற்கு நஞ்சற்ற உணவை தேடுகிறோம். மருந்தெடுக்க செல்லும் போது வைத்தியர் கொடுக்கும் மருந்தை எவ்வித பயமுமின்றி குடிக்கிறோம். ஆனால் சில மதக் கொள்கைகளில் அவ்வாறு செய்யக்கூடாதென கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனால் சிலர் இறந்து போகிறார்கள். பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

ஆனால் இறைவன் கொடுத்தது எல்லாம் மக்களின் நலனுக்காகத்தான். எல்லா மதங்களிலும் முதன்மையானது மக்களின் நலமே. நாம் சரியான நேரத்துக்கு உணவைப் பெற்று சுகாதாரத்தைப் பேணுவது போல இந்தத் தடுப்பூசியை எவ்வித பயமுமின்றி பெற்று பாதுகாப்பை பெறுவது அவசியமாகும். நாம் எதிர்கால சந்ததிக்காக வாழவேண்டும் என்பதால் முடிந்தளவு விரைவில் தடுப்பூசியை பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tue, 08/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை