ஏழு மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் பெற்றுக்கொடுப்பு; அடுத்த மாத நடுப்பகுதிக்குள் 60 வீதமானோருக்கு தடுப்பூசி

நாட்டை முழுமையாக திறக்க முடியும் - சுகாதார அமைச்சர் கெஹெலிய

அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் நேற்று வரை ஏழு மில்லியன் மக்களுக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதிக்குள் நாட்டில் 60 வீதமான மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என தெரிவித்துள்ள அவர், அதனையடுத்து நாட்டை முழுமையாக மீளத் திறக்க முடியும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல:

நேற்று முன்தினம் மாத்திரம் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க நேற்று முன்தினம் வரை ஏழு இலட்சத்து 42 ஆயிரத்து 418 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஹிக்கடுவ பிரதேசத்தில் தடுப்பூசி வழங்கியுள்ளமையை உறுதிப்படுத்தும் அட்டையில் அதனை வழங்கியுள்ளதாக அடையாளமிட்டுள்ளபோதும் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விரைவான விசாரணையை மேற்கொள்ளப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே வேளை:சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் அறிக்கைக் கிணங்க நாட்டில் 12, 309, 254 நபர்களுக்கு முதலாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கும் செயற்றிட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நேற்றைய தினமும் பல்வேறு தடுப்பூசி நிலையங்களிலும் மக்கள் பெருமளவில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதை காண முடிந்தது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 08/30/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை