அம்பாறை மாவட்டத்தில் ஒரே நாளில் 411 பேருக்கு கொரோனா

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாக என்றுமில்லாதவாறு மிகவும் தீவிரமடைந்துள்ளது. நேற்று வியாழன் (12) முற்பகல் 10.00 மணி வரையான காலப்பகுதியில் 411 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நிர்வாகப் பிரிவில் 150 பேரும் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நிர்வாகப் பிரிவில் 261 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதேவேளை, கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நூறை எட்டியிருக்கிறது. இங்கு தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை ஐயாயிரத்தை எட்டி விட்டது.

கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதனால் வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சை நிலையங்களிலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

நிலைமை மிகவும் மோசமடைந்து விட்டது. இந்த அபாய நிலைமையைக் கவனத்தில் கொண்டு கொவிட் கட்டுப்பாட்டுக்கான சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது எனவும் அவர் வலியுறுத்தினார்.

கல்முனை விசேட நிருபர்

 
Fri, 08/13/2021 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை