ஏழு நாட்களில் 385 வாகன விபத்துக்கள்

51 பேர் உயிரிழப்பு; 262 பேருக்கு காயம்

நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 385 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, வீதி விபத்துகள் காரணமாக நேற்று (01) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த காலத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஏனைய மூவரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மாதம் 24 -30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் 385 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அதற்கமைய நாள் ஒன்றுக்கு 50 என்ற அடிப்படையில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

இந்த விபத்துக்களில் 51 பேர் உயிரிழந்துள்ளனர், 262 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுள் 108 பேர் படுகாயமடைந்துள்ளதுடன்,152 பேர் சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலேயே அதிகளவான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. மேலும், சனி, ஞாயிறு மற்றும் புதன் ஆகிய கிழமைகளிலேயே அதிகளவான விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேவேளை பெருமளவான விபத்துகள் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையிலான காலப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன.

வீதி விபத்துகளின்போது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணித்தவர்களே அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர். வாகன சாரதிகளின் கவனக்குறைப்பாட்டின் காரணமாகவே பெருமளவான வாகன விபத்துகள் இடம்பெறுகின்றன. அதனால் வாகன சாரதிகள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும். இதேவேளை வீதி விபத்துகளை தடுப்பதற்காக பயணிகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

Mon, 08/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை