ஆப்கானிலிருந்து ஓகஸ்ட் 31 கெடுவுடன் வெளியேறுவதற்கு அமெரிக்கா திட்டம்

வெளியேற்ற நடவடிக்கை தீவிரம்

ஆப்கானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி காலக்கெடுவுக்கு அமைய வெளியேற்ற நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்தக் காலக்கெடுவை நீடிக்க கூட்டணி நாடுகள் வலியுறுத்திய நிலையிலேயே பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘விரைவாக நாம் இதனை சிறந்த முறையில் பூர்த்தி செய்வோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சில அமெரிக்க துருப்புகள் ஏற்கனவே வெளியேறிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இது வெளியேற்ற நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பது நாட்களுக்கு முன் ஆப்கான் தலைநகர் காபூல் தலிபான்களிடம் வீழ்ந்த பின்னர் இதுவரை குறைந்து 70,700 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கத் துருப்புகள் நாட்டை விட்டு வெளியேறும் காலக்கெடுவை நீடிப்பது பற்றி தலிபான்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பில் பைடன் கூறும்போது, ‘எமது மக்கள் வெளியெறுவதற்கு தலிபான்கள் உதவி வருகின்றனர்” என்றார். தலிபான்களின் செயற்பாடுகள் பற்றி சர்வதேச சமூகம் தீர்ப்பு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘தலிபான்களின் வார்த்தைகளை நாம் முழுமையாக நம்பப்போவதில்லை’ என்றும் பைடன் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு குழுவின் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதால் வெளியேற்ற நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வரும் என்று பைடன் தெரிவித்தார். அந்த நாட்டில் அமெரிக்கா தொடர்ந்து இருப்பது அந்தக் குழுக்களின் தாக்குதலுக்கு இலக்காகும் அச்சுறுத்தலுக்கு காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜி7 மாநாட்டுக்கு பின்னர் உரையாற்றும்போதே பைடன் இதனைத் தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பங்கேற்ற ஜ7 மாநாட்டில் ஆப்கான் விவகாரம் பேசப்பட்டது. மேலும் மீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஓகஸ்ட் 31 காலக்கெடுவுக்கு பின்னரும் அமெரிக்கா ஆப்கானில் இருக்க வேண்டும் என்று பிரிட்டன் மற்றும் ஏனைய கூட்டணி நாடுகள் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடைசித் தருணம் வரை மக்களை வெளியேற்றும் நடவடிக்கைளை எடுக்கப் போவதாக ஜி7 கூட்டத்துக்கு தலைமை விகித்த பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறினார். காலக்கெடு முடிந்த பின்னரும் மக்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று அவர் தலிபான்களைக் கேட்டுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு முடிந்தவரை உதவுவது தார்மீகக் கடமை என்று தலைவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வோன் டெல் லெயேன் கூறினார்.

காபூலில் இருந்து வெளிநாட்டினரையும் தகுதியான ஆப்கானியரையும் வெளியேற்றுவதற்காக அங்குள்ள விமான நிலையத்தில் சுமார் 6 ஆயிரம் அமெரிக்க வீரர்களும், பிரிட்டனைச் சேர்ந்த சுமார் ஆயிரம் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தவிர, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் துருக்கி உள்ளிட்ட பிற நேட்டோ நாடுகளைச் சேர்ந்த சிறிய இராணுவக் குழுக்களும் காபூலில் உள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 21,000 க்கும் மேற்பட்ட மக்கள் காபூலில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 31 காலக்கெடுவுக்கு முன்னதாகவே சில அமெரிக்கப் படை வீரர்கள் அங்கிருந்து புறப்படுவது மீட்புப் பணிகளைப் பாதிக்காது என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று இரு அமெரிக்க செனட் அவை உறுப்பினர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் காபூலுக்குப் பறந்து சென்றனர். இது சமூக ஊடகங்களில் கடும் எதிர்வினையைத் தூண்டியது. ஜனநாயகக் கட்சியின் சேத் மோல்டன் மற்றும் குடியரசுக் கட்சியின் பீட்டர் மீஜர் ஆகியோர் காபூல் விமான நிலையத்தில் பல மணி நேரம் இருந்ததாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

இராணுவ மற்றும் ராஜீய அதிகாரிகளிடம் அனுமதி பெறாத இந்தத் திடீர்ப் பயணம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கடும் கோபமடைந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

விமான நிலையத்திற்கு செல்ல முயன்ற சில ஆப்கானிஸ்தான் குடிமக்கள் சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டதாக மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருப்போர் தெரிவித்தனர். எனினும் அவர்களுக்கு அனுமதி மறுப்பது யார் என்று தெளிவாகத் தெரியவில்லை.

விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கடந்த வாரம் முழுவதும் மக்கள் அதன் வாயில்களைக் கடந்து செல்வது கடினமாக இருந்தது. இப்போது நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.

ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தாங்கள் விரும்பவில்லை என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதனால் விமான நிலையத்துக்குச் செல்லும்போது ஏதேனும் நடந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே நாட்டை விட்டு வெளியேறும் திட்டத்தை பலர் கைவிட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.

காபூலில் இருந்து மணிக்கு ஒரு விமானம் புறப்படுகிறது. முதலில் விமானங்களில் நெரிசல் அதிகமாக இருந்தது. இப்போதே ஆட்கள் இல்லாமல் சில விமானங்கள் பறக்க வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆபத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானியரை நாட்டில் இருந்து மீட்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் உண்மையில் களநிலவரம் நிச்சயமற்றதாகவும், குழப்பமானதாகவும் உள்ளது.

காலக்கெடுவை நீட்டிப்பதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்றும், விமான நிலையத்துக்குச் செல்வது தடை செய்யப்படும் என்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமையன்று கூறியிருந்தார்.

விமான நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தில் சிக்கி “மக்கள் தங்கள் உயிரை இழக்கும் ஆபத்து உள்ளது” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முழுமையான பயண ஆவணங்களை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தானியரும் நாட்டை விட்டு வெளியேற முடியாதா என்ற குழப்பத்தை இவரின் பேட்டி ஏற்படுத்திவிட்டது.

Thu, 08/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை