24 மணி நேரத்திற்குள் இரு மாகாண தலைநகரங்கள் தலிபான்கள் வசம்

மேலும் பல நகரங்களிலும் மோதல்

வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான ஜவுஸ்ஜனின் தலைநகர் செபர்கானை கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

எனினும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து நகரில் நிலைகொண்டிருப்பதாகவும் தலிபான்கள் விரைவில் அங்கிருந்து அகற்றப்படுவார்கள் என்று ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே தென் மேற்கு மாகாணமான நிம்ரோசின் தலைநகர் சரஞ்ச் கடந்த வெள்ளிக்கிழமை தலிபான்களிடம் வீழ்ந்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த இரண்டாவது பிராந்திய தலைநகராக இது உள்ளது.

நாடு முழுவதும் மோதல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் பாதுகாப்பு படையினருக்கு இது பெரும் பின்னடைவாக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு படையினர் அந்நாட்டில் இருந்து முழுமையாக வாபஸ் பெற ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே அங்கு மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் தலிபான்கள் கிராமப் புறங்களின் பெரும் பகுதியை கைப்பற்றியதோடு தற்போது முக்கிய சிறு நகர்கள் மற்றும் நகரங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.

செபர்கான் நகர் ஆப்கானின் போர் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்லா ரஷீத் டொஸ்டும்மின் கோட்டையாக இருந்த பகுதியாகும். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் முன்னின்று செயற்பட்டனர். இந்நிலையில் ஆப்கான் படையினருக்கு உதவ 150 பேர் அந்த நகருக்கு சென்றிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கடும் மோதலை அடுத்து ஆளுநரின் வளாகத்தை தலிபான்கள் கைப்பற்றியபோதும் ஆப்கான் படையினர் அதனை பின்னர் மீட்டனர். எவ்வாறாயினும் இராணுவ முகாம் ஒன்று தவிர்த்து போராளிகள் ஒட்டுமொத்த நகரையும் கைப்பற்றியுள்ளனர் என்று பிராந்திய கௌன்சில் தலைவர் பாபுர எஸ்சி பி.பி.சி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார். நகரில் இன்னும் மோதல் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நகரில் அரச படையினரே பெரும்பான்மையாக இருப்பதாகவும். தீவிரவாதிகளிடம் இருந்து அந்த நகர் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் ஆப்கான் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பவாத் அமான் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தலிபான்கள் நகரின் பகுதிகளை கைப்பற்றியதை ஒப்புக்கொண்ட அவர் சிவில் உயிரிழப்புகளை தவிர்க்கவே அரச துருப்பினர் பின்வாங்கியதாகவும் குறிப்பிட்டார்.

நகரின் தலிபான் நிலைகள் மீது அமெக்காவின் பி-52 போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை செபர்கான் நகரின் சிறைச்சாலையை கைப்பற்றியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அந்த சிறையில் இருந்து கைதிகள் வெளியேறும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது. மேற்கில் ஹெரத், தெற்கு நகராங்களான கந்தஹார் மற்றும் லஷ்கர் காஹ் உட்பட ஏனைய மாகாணத் தலைநகரங்களும் தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

லஷ்கர் காஹ்வில் சிரேஷ்ட கொமாண்டர்கள் உட்பட பல டஜன் கணக்கான இஸ்லாமியவாத போராளிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்தக் கூற்றை தலிபான்கள் மறுத்துள்ளனர்.

ஆப்கான் தலைநகர் காபுலில் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கனியின் முன்னாள் பேச்சாளரை சுட்டுக் கொன்ற தலிபான்கள் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டின் மீதும் தாக்குதல்கள் நடத்தினர். அண்மைய வார தாக்குதல்களில் நாட்டின் பல எல்லைக் கடவைகளையும் தலிபான்கள் கைப்பற்றினர். இதில் பாகிஸ்தானுடனான எல்லையை தலிபான்கள் மூடியுள்ளனர். இதனால் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பாகிஸ்தான் பக்கமாக பல டஜன் ஆப்கானியர்கள் நிர்க்கதியாகி இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

‘மூன்று நாட்களுக்கு முன்னர் நாம் இறுதிச்சடங்கு ஒன்றுக்காக வந்தோம். தற்போது எல்லை மூடப்பட்டுள்ளது. நாம் இங்கே இருந்து கொண்டிருக்கிறோம். எம்மிடம் உணவு, பணம் எதுவும் இல்லை’ என்று கந்தஹாரில் உள்ள தமது வீட்டுக்கு திரும்ப எதிர்பார்த்திருக்கும் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிருவனத்திடம் தெரிவித்தார்.

Mon, 08/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை