மலையக மக்களுக்கும் ரூபாய் 2000 நிவாரணம்

சென்றடைய வேண்டும் − வடிவேல் சுரேஷ் MP

 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 2000 ரூபாய் நிதியுதவி பாரபட்சமின்றி மலையக மக்களையும் சென்றடைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.  “நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்று நிலைமை காரணமாக பொது ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பெருந்தோட்ட மலையக மக்கள் பலர் சிரமத்துக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கின்ற நிலையில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 2000 ரூபாய் நிதி உதவி, பாரபட்சமின்றி மலையக பெருந்தோட்ட மக்களையும் சென்றடைய வேண்டும் .

மேலும் பெருந்தோட்ட நிர்வாகங்களும் மனிதாபிமான ரீதியில் இச்சந்தர்ப்பத்தில் நடந்து கொள்ள வேண்டும். மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். இவ்விடயம் தொடர்பில் கடந்த வாரத்தில் பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு எழுத்துமூல அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் என்னுடைய இம்மாத பாராளுமன்ற ஊதியத்தை கொரோனா நிதிகளுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் பாராளுமன்ற செயலாளர் அவர்களுக்கும் அறிவித்திருக்கின்றேன்” என தெரிவித்தார்.

 

மடுல்சீமை நிருபர்

Tue, 08/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை