உழைப்பை இழந்த குடும்பங்களுக்கு 2000

இன்று முதல் ஏற்பாடு; முதற் கட்டம் கொழும்பில்

 

 

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும். மாவட்ட செயலகங்களின் ஊடாக கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை  விரைவாகத் தயாரிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை பொது முடக்க காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அரச உதவி எதுவும் பெறாத வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென அரசினால் வழங்கப்பட உள்ள ரூபா 2,000 இற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு ரூபா. 2,000 நிவாரணத்தை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் ஆரம்பமாகும் என்றும் அதற்கிணங்க முதற்கட்டமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

13 பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கூடாக மேற்படி கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்கள் தொடர்பில் தெரிவித்துள்ள அவர், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமே அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடமாடும் வர்த்தகர்களிடம் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் மாவட்ட செயலகம் மற்றும் கிராம சேவை அலுவலர், நுகர்வோர் விவகார அதிகார சபையிடமும் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போலன்றி இம்முறை தீவிர கண்காணிப்புடன் மேற்படி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றி வளைப்புக்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செலவநாயகம்

Mon, 08/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை