ஆப்கானின் 2ஆவது பெரும் நகரான கந்தஹார் தலிபான்களிடம் வீழ்ந்தது

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கந்தஹாரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இது ஆப்கான் அரசுக்கு பெரும் பின்னடைவாக இருப்பதோடு தலிபான்கள் இதுவரை பெற்ற மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தவிர கடந்த ஒரு வாரத்திற்கும் மோலாக உக்கிர மோதல் நீடித்து வந்த நாட்டின் தெற்கில் லஷ்கர் காஹ் மற்றும் ஹெரத் ஆகிய மாகாணத் தலைநகரங்களும் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளன.

இதில் கந்தஹார் நகர் முன்னர் தலிபான்களின் கோட்டையாக இருந்த பகுதி என்பதோடு முன்னணி வர்த்தக மையமாகவும் மூலோபாயமிக்க பகுதியாகவும் அது உள்ளது.

‘இரவு நீடித்த கடும் மோதலுக்கு பின்னர் தலிபான்கள் கந்தஹாரை தமது பிடிக்குள் கொண்டுவந்தனர்’ என்று உள்ளூர் அரச அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

வேகமாக முன்னேறி வரும் தலிபான்கள் தற்போது வடக்கு ஆப்கானிஸ்தானை பெரும்பாலும் தமது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்திருப்பதோடு மூன்றில் ஒரு பிராந்திய தலைநகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானில் 20 ஆண்டு போர் நடவடிக்கைக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் சர்வதேச படையினர் ஆப்கானில் இருந்து முற்றாக வாபஸ் பெறும் கடைசி கட்டத்தை எட்டியிருக்கும் சூழலிலேயே அங்கு தலிபான்களின் கை ஓங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க தூதரக ஊழியர்களை வெளியேற்றுவதற்கு உதவ ஆப்கானுக்கு மீண்டும் சுமார் 3,000 துருப்புகளை அனுப்ப திட்டமிட்ருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காபுல் விமான நிலையத்திற்கு துருப்புகளை அனுப்பி சிறப்பு விமானத்தில் கணிசமான எண்ணிக்கையான தூதரக ஊழியர்களை வெளியேற்றவிருப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

பிரிட்டனும் தமது மக்களை ஆப்கானில் இருந்து வெளியேற்ற உதவும் வகையில் 600 படையினரை அங்கு அனுப்பப்போவதாக குறிப்பிட்டுள்ளது. காபுலில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஆப்கானின் முக்கிய நகரங்களான ஹெரத், கான்சி, குலால் அல் நவ் ஒன்றன் பின் ஒன்றாக தலிபான்களிடம் வீழ்ந்தது. தொடர்ந்து ஹெல்மாண்ட் மாகாண தலைநகர் லஷ்கர் காஹ் நகரையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களின் வேகமான முன்னேற்றம் தலைநகர் காபுலை நோக்கி திரும்பும் அச்சம் அதிகரித்துள்ளது. தலைநகரில் தற்போது வன்முறையில் இருந்து தப்பிவந்த ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்களின் பிறந்தகமான கந்தஹாரின் புறநகர் பகுதிகளை கடந்த பல வாரங்களாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தலிபான்கள் நகரின் மத்திய பகுதி மீது கடந்த வியாழக்கிழமை உக்கிர தாக்குதலை ஆரம்பித்தனர்.

தொடந்து கந்தஹார் சிறைச்சாலையை கைப்பற்றிய அவர்கள் அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்தனர்.

கந்தஹாரின் சர்வதேச விமானநிலையம், அதன் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் காரணமாக அந்த நகர் மூலோபாயம் மிக்கதாக உள்ளது. அது நாட்டின் பிரதான வர்த்தக மையங்களில் ஒன்றாகவும் உள்ளது.

 

Sat, 08/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை