ஆசிய நாடுகளில் கொவிட்-19 பாதிப்பு தீவிரம்: பல நாடுகளில் புதிய உச்சம்

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி வரும் டோக்கியோ நகர் மற்றும் தாய்லாந்து, மலேசியாவில் கடந்த சனிக்கிழமை இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா தொற்று சம்பங்கள் அதிகரித்துள்ளன. வேகமாகப் பரவக்கூடிய டெல்டா திரிபே நோய்த் தொற்று அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

முன்னர் கொரோனா தொற்றை தடுப்பதில் வெற்றிகண்ட ஆசிய நாடுகளும் தற்போது டெல்டா திரிபினால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

டோக்கியே நகரில் கடந்த சனிக்கிழமை முடிவுற்ற 24 மணி நேரத்தில் 4,058 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டியுடன் தொடர்புபட்டு 21 புதிய தொற்று சம்பங்கள் அடையாளம் காணப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக ஜப்பான் நிர்வாகம் நாட்டின் பல பகுதிகளுக்கும் அவரச நிலையை விரிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நோய்த் தொற்றின் மையப் புள்ளிகளில் ஒன்றாக மாறியிருக்கும் மலேசியாவில் கடந்த சனிக்கிழமை சாதனை எண்ணிக்கையாக தினசரி நோய்த் தொற்று சம்பவங்கள் 17,786 உயர்ந்துள்ளது.

அரசு வைரஸ் தொற்றை கையாளும் முறை குறித்து தலைநகர் கோலாலம்பூரில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு பிரதமர் முஹ்யத்தீன் யாசீனை பதவி விலகும்படி கோசம் எழுப்பினர்.

தாய்லாந்திலும் தினசரி நோய்த் தொற்று சம்பவங்கள் 18,912 ஆக உச்சத்தை தொட்டிருப்பதோடு அங்கு மொத்த நோய்த்தொற்று சம்பவங்கள் 597,912 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 178 புதிய உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றுச் சம்பவங்களில் 60 வீதமானது டெல்டா திரிபாக இருப்பதாகவும் அதுவோ பாங்கொக் நகரில் 80 வீதமாக உள்ளது என்றும் தாய்லாந்து அரசு குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் பாங்கொக்கிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் உள்ள மருத்துவமனைகள் நிலைமையைச் சமாளிக்கத் திணறுகின்றன. மறுபுறம், சீனாவில் டெல்டா வைரஸ் வகை, மேலும் பல வட்டாரங்களுக்குத் தொடர்ந்து பரவக்கூடுமென அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எளிதில் தொற்றக்கூடிய அந்தக் வைரஸ் வகை, கூட்டமான சுற்றுலாத் தலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை சீனாவின் 14 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் மட்டும் 300க்கும் அதிகமானோர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்புத் தடங்களைக் கண்டறியும் பணிகள் பெரிய அளவில் நடைபெறுகின்றன.

வைரஸ் தொற்றும் அபாயமுள்ள வட்டாரங்களுக்குப் பயணம் செய்யவேண்டாமென சீன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

Mon, 08/02/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை