கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான 700 கர்ப்பிணிகளில் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் 700 கர்ப்பிணிகளும் புதிதாக பிரசவம் இடம்பெற்ற மேலும் பல தாய்மார்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா, 19 கர்ப்பிணிகள் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போது கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகும் கர்ப்பிணிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்குச் செல்வோர் வீதம் அதிகரித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் கர்ப்பிணிகளின் உயிரிழப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க சகலரும் தாமதிக்காது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் அல்லது பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பது தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகிறது. இலங்கையில் அவ்வாறு எதுவும் பதிவாகவில்லை. ஆரம்பத்தில் சிக்கல் நிலையிலுள்ள கர்ப்பிணிகளுக்கு மாத்திரம் தடுப்பூசிவழங்கப்பட்டது.

ஆனால் தற்போதுள்ள அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு சகல கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதோடு, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை மேலும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
 

Thu, 08/12/2021 - 09:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை