வீட்டுப் பணியாளர்களது வயதை 18 ஆக அதிகரிக்க அரசு முடிவு

தொழில் சட்டத்தில் திருத்தம் செய்து சிறுவர்களை பாதுகாக்க திட்டம்

 

வீட்டுப் பணியாளர்களாக தொழில் புரிவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொழில் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் வீட்டுப் பணியாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுவோரின் வயதெல்லையை 18 ஆக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை 12,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக தனியார் துறை ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 3500 ரூபா கொடுப்பனவு அடங்கலாக அவர்களின் மாத சம்பளம் 16,000 ரூபா வரை உயர்வடையுமென்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசிய ஆகக் குறைந்த சம்பள சட்டத் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எமது அரசாங்கத்தின் சௌபாக்கிய கொள்கைப் பிரகடனத்திற்கமைய ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவில் இருந்து 12 ஆயிரத்து 500 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனை  செயற்படுத்துவதே இந்த திருத்தத்தின் நோக்கமாகும்.

இலங்கையின் ஊழியர்களில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் தனியார் துறை ஊழியர்களாவர். இவர்களின் சம்பளம் தொடர்பாக மூன்று விடயங்கள் உள்ளன. சேவை வழங்குனரின் நிபந்தனைகள், கூட்டு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் சட்டங்கள் உள்ளன. இவற்றுக்கும் மேலாகவே தேசிய ஆகக் குறைந்த சம்பள சட்டம் உள்ளது. இதிலேயே அதனை தீர்மானிக்க முடியும்.

இதன்படி அனைத்து தனியார் துறையினரும் உள்ளடங்கும் வகையில் தேசிய குறைந்தபட்ச சம்பள சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த சம்பள தொகை 10 ஆயிரமாக உள்ளது. எவ்வாறாயினும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இதற்கு முன்னர் 3500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. அந்த கொடுப்பனவு அடங்கலாக புதிய சட்டத்தில் ஆகக் குறைந்த சம்பளம் 12,500 ரூபாவாக அதிகரிப்பதன் ஊடாக தனியார் துறை ஊழியரின் குறைந்த சம்பளம் 16 ஆயிரம் ரூபா வரையில் உயரவுள்ளது.

இதேவேளை வாழ்க்கைச் செலவு தற்போது 21 வீதத்தால் உயர்வடைந்துள்ள நிலையில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் வகையில் எமது ஊழியர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால் அது தொடர்பில் விசேட சட்டங்களை கொண்டு வர நடவடிக்கையெடுப்போம்.

வீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் தொடர்பில் சட்டம் எமது நாட்டில் இல்லை. வெளிநாடுகளில் இதற்கென சட்டம் உள்ளது. 1946 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று உள்ள போதும் அதில் அவர்களை பதிவு செய்வது தொடர்பாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அபாயகரமான தொழில் பிரிவில் வீட்டுப் பணியாளர்களையும் உள்ளடக்கி அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அச்சிட்டு வெளியிட அனுமதியை கோரியுள்ளேன். இது தொடர்பாக அடுத்த வாரமளவில் பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்தி அதற்கான வயதெல்லையை 18 ஆக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வீட்டுப் பணியாளர்களுக்கு தேவையான சட்டம் இல்லை. அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடையாது. இதனால் இது தொடர்பில் கவனம் செலுத்தி இவற்றை பெற்றுக்கொடுக்கவும், பணிகால கொடுப்பனவை பெற்றுக்கொள்ளவும் மற்றும் அவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க நடவடிக்கையெடுக்கப்படும். இதற்கமைய வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேலைத்திட்டங்களை நாங்கள் அமைத்துள்ளோம் என்றார்.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 08/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை