கிராமங்களிலிருந்து சிறிய நகரங்களுக்கு விசேட போக்குவரத்து சேவை

விரைவில் ஆரம்பிக்க அமைச்சு நடவடிக்கை

மக்களின் நலன் கருதி கிராமங்களிலிருந்து அருகில் உள்ள சிறிய நகரங்களுக்கு "கெம்செறிய" என்ற பெயரில் பொது போக்குவரத்து சேவை ஒன்றை நடைமுறைப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இந்த போக்குவரத்து சேவைக்கு இதுவரை 600 பஸ்களை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்து முகாமைத்துவ பணிப்பாளர் குழுக்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டத்தின் முதன்முதலாக கண்டியில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த தேசிய வேலைத்திடடத்திற்கான ஆரம்ப நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தில் (7) நடைபெற்றது.

"கெம்செறிய" திட்டமானது கிராமப்புறங்களில் குறைந்த எரிபொருள் செலவிலும் குறைந்த பராமரிப்பு செலவிலும் இயக்கக்கூடிய மினி பேருந்துகளை கொண்டதாகும். இவை வெறுமனே பயணிகள் போக்குவரத்துக்கு மட்டும் தயாரிக்கப்பட்டுள்ள பஸ்களாகும் . மேலும் இத்திட்டமானது தனியார் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என தெரிவித்த அமைச்சர் இதற்கு மாவட்ட போக்குவரத்து முகாமைத்துவ குழு முழு பொறுப்புகளை வகிக்கும் என்றும் கூறினார்.

மேலும் எதிர்காலத்தில் பாடசாலைகள் தோறும் ஆரம்ப பிரிவுகளில் உள்ள குழந்தைகளை கொண்டு செல்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை மாதாந்த கட்டணத்தை விசேட சலுகை அடிப்படையில் வழங்கும் சேவையை மேற்கொள்ளும் எனவும் முன்பள்ளி மாணவர்கள் பயணிக்கும் பஸ்களில் பஸ் சாரதிக்கு மேலதிகமாக முன்பள்ளி தொடர்பில் பயிற்சி பெற்ற ஒருவரும் பணிக்கமர்த்தப்படுவார் என தெரிவித்தார். மேலும் குழந்தையை வீட்டில் இருந்து அழைத்துச் செல்லுவதுடன் பாடசாலை முடிந்ததும் வீட்டிற்கு ஒப்படைக்கும் வகையிலான சேவையொன்றையும் இலங்கை போக்குவரத்து சபை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

இந்த சேவையில் முன்பள்ளி பயிற்சி பெற்றுள்ளவர் இருப்பதானால் குழந்தைகளுக்கான பாதுகாப்பு போன்ற இன்னோரன்ன பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வார், ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பயமும் இல்லாமல் பாடசாலைகளுக்கு அனுப்பலாம் என்றும் அவர் கூறினார்.

(எம்.ஏ.அமீனுல்லா )

 

Sat, 07/10/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை