ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலையின் பின்னணியில் வெளிநாட்டு குழுவினர்

சூத்திரதாரிகள் பற்றி தீவிர விசாரணை

இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற ஹெய்ட்டி ஜனாதிபதி ஜொவனெல் மொயிஸின் படுகொலையில் ஓய்வுபெற்ற கொலம்பிய படையினரை கொண்ட தாக்குதல் குழு ஒன்று ஈடுபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுவில் 26 கொலம்பியர்கள் மற்றும் ஹெய்ட்டியை பூர்வீகமாகக் கொண்ட இரண்டு அமெரிக்கர்கள் இருந்திருப்பதாக பொலிஸ் மாஅதிபர் லியோன் சார்ல்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதில் எட்டு சந்தேகநபர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதோடு இரு அமெரிக்கர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது எஞ்சிய சந்தேக நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிதாரிகள் கடந்த புதன்கிழமை காலையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு ஜனாதிபதி மொயிஸின் மனைவி காயத்திற்கு உள்ளாகி சிகிச்சைக்காக புளோரிடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

யார் இந்த தாக்குதலை திட்டமிட்டார்கள் மற்றும் அதன் நோக்கம் பற்றி இன்னும் தெரியவரவில்லை. எனினும் நாட்டில் அதிகாரம் மிக்க குழு ஒன்றுக்கு எதிராக 53 வயதான ஜனாதிபதி மொயிஸ் போராடி வந்த நிலையில் அது காரணமாகக் இருக்கக் கூடும் என்று இடைக்கால பிரதமர் கிளெடி ஜோசப் தெரிவித்தார்.

பிடிபட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களின் கொலம்பிய நாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் ஆயுதங்களை பொலிஸார் கடந்த வியாழக்கிழமை ஊடகங்களுக்கு காண்பித்தனர். 'ஜனாதிபதியை கொல்வதற்காக வெளிநாட்டினர் எமது நாட்டிற்கு வந்துள்ளனர்' என்று சார்ல்ஸ் தெரிவித்தார்.

'அடுத்த எஞ்சியுள்ள கூலிப்படையினரையும் பிடிப்பதற்கு எமது விசாரணைகள் மற்றும் எமது தேடுதல் தொழில்நுட்பத்தை பலப்படுத்துவோம்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் தாக்குதல் குழுவின் குறைந்தது ஆறு பேர் இராணுவத்தின் ஓய்வுபெற்ற உறுப்பினர்களாக இருப்பதாக கொலம்பிய அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளில் ஒத்துழைப்பு அளிப்பதாக கொலம்பிய அரசு ஹெய்ட்டிக்கு உறுதி அளித்துள்ளது.

மறுபுறம் தமது நாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் இன்னும் உறுதி செய்ய முடியாதிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த படுகொலையின் சூத்திரதாரிகளை தேடி விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது நாட்டில் பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கான் பிராந்தியத்தின் மிக வறிய நாடாக ஹெய்ட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த கூட்டத்தினர் தலைநகரில் ஒன்று திரண்டு தமது கோபத்தை வெளியிட்டு வருகின்றனர். சில கார் வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பெரும் கூட்டம் திரண்டுள்ளது.

நாட்டில் அவசர நிலை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் படுகொலை நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்கள் பற்றிய குழப்பமும் நேர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதியரசர் அதிகாரத்தை ஏற்க வேண்டும் என்று அரசியலமைப்பு கூறியபோதும், அவர் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் அண்மையில் உயிரிழந்தார்.

தொடர்ந்து, பிரதமர் தலைமை வகிக்க வேண்டும் என்று திருத்தம் பரிந்துரைக்கிறது. மொயிஸ் பதவியில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் ஆறு பிரதமர்கள் பதவி வகித்திருப்பதோடு அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஏழாவது பிரதமராக ஏரியல் ஹென்ரியை அறிவித்தபோதும், அவர் பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கவில்லை.

Sat, 07/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை