எரிபொருள் மற்றும் எரிவாயுவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய அரசாங்கம் திட்டம்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயுவை எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்துக்கொள்வதற்காக புதிய பெற்றோலிய திருத்தச்சட்டம் இரண்டுவாரங்களுக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடியது. சபாநாயகர் அறிவிப்பு மனுக்கள் சமர்ப்பணத்தை தொடர்ந்து இடம்பெற்ற கேள்விநேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் கம்மன்பில இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எரிபொருள் பிரச்சினைக்கு உடனடி தீர்வுகளுக்கு பதிலாக நடுத்தர மற்றும் நீண்டகால தீர்வுகள் அவசியமாகும். எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு நாட்டுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயுவை உள்நாட்டிலேயே தயாரித்துக்கொள்வதற்கான திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதன்மூலம் வருடமொன்று 350 மில்லியன் டொலரை எம்மால் சேமித்துக்கொள்ள முடியும். அதாவது உர இறக்குமதிக்காக நாம் செலவிடும் அளவிலான நிதியை உள்நாட்டில் எரிபொருள் உற்பத்தியை மேற்கொள்வதன் ஊடாக கையிருப்பில் வைத்துக்கொள்ள முடியும்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அதன் தேவை தொடர்பில் நீண்டகால தீர்வுகளே அவசியமாகவுள்ளன. எரிபொருள் விலை அதிகரித்தவுடன் பொது மக்கள் அச்சத்துக்கு உள்ளாகுகின்றனர். ஆனால், அரேபிய நாடுகள் எரிபொருள் விலை அதிகரித்தால் மகிழ்ச்சியடைகின்றன. காரணம் விலை அதிகரித்தால் அவர்களது வருமானமும் உயர்வடையும்.

எமது நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தியை மேற்கொள்ள முடியும். 1964ஆம் ஆண்டு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இதற்காக செயலணியொன்று உருவாக்கப்பட்டிருந்தது. என்றாலும் அந்த இலக்கை வெற்றிக்கொள்ள முடியாது போனது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெற்றோலிய சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். இதன் பிரதிபலனாக எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யப்படும் நாடுகளின் பட்டயலில் இலங்கையும் இருக்கும் என்பதுடன், எமக்குத் தேவையான எரிபொருளும் இங்கேயே உற்பத்தி செய்யப்படும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 07/09/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை