இணையவழி கல்வியை இடைநிறுத்த தீர்மானம்

14 ஆசிரியர் தொழிற் சங்கங்கள் இணைந்து முடிவு

 

 

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அதிபர் மற்றும் ஆசிரியர்களின்  சுயவிருப்பின் அடிப்படையில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வந்த இணையவழி கல்வி நடவடிக்கைகளை நேற்றிலிருந்து (12) மறு அறிவித்தல்வரை இடைநிறுத்துவதற்கு 14 அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே , இதுவரையான காலமும் முன்னெடுக்கப்பட்டுவந்த இணையவழி கல்வி நடவடிக்கையின் பெறுமதி என்னவென்று அரசாங்கத்திற்கும் கல்வியமைச்சுக்கும் உணர்த்துவதுடன் சரியான பாடமொன்றைப் புகட்டவேண்டிய அவசியமேற்பட்டுள்ளது.

அதன்காரணமாகவே அனைத்து அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் கூட்டு இணக்கப்பாட்டுடன் இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்விசார் தொழில்வல்லுனர்கள் அமைப்பின் பிரதிநிதியும் தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளருமான உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு பாரிய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில், நடைமுறைக்குப் பொருத்தமான தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு அரசாங்கமும் முன்வராத சூழ்நிலையில் நாட்டிலுள்ள அதிபர், ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து இணையவழியின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்கள்.

எனினும் இதனூடாகத் தமக்குக் கிடைக்கக்கூடிய இலாபம் தொடர்பில் மாத்திரமே அரசாங்கம் கவனம் செலுத்தியது. மாறாக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிப்படைவது தொடர்பிலோ அல்லது அதற்கு அவசியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது குறித்தோ அரசாங்கம் சிந்திக்கவில்லை.

மேலும் அண்மையில் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அதற்கான முதற்படியாகும். ஆசிரியர் சங்கத் தலைவரையோ அல்லது தொழிற்சங்கத் தலைவர்களையோ கைது செய்வதன் ஊடாக எமது போராட்டங்களை வலுவிழக்கச் செய்து விடமுடியும் என்று அரசாங்கம் கருதுமேயானால், அது மிகவும் தவறான கணிப்பாகும் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 07/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை