நாடு திரும்பும்படி உய்கர் முஸ்லிம்களுக்கு சீனா அழைப்பு

மறுப்போரின் குடும்பம் தடுத்துவைக்கப்படலாம் என்கிறது உய்கர் அமைப்பு

வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வாழும் உய்கர் முஸ்லிம்கள் சீனாவில் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய பேசுவதைத் தடுக்கும் வகையில் பயமுறுத்தல்களை பீஜிங் விடுத்து வருவதாக உலக உய்கர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வாழும் உய்கர்கள் சீன உய்கர் சமூகத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி பேசினால் சீனாவில் வாழும் அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் தண்டிக்கப்படுவார்கள், சிறையில் அடைக்கப்படுவதோடு கொல்லப்படவும் கூடும் என பயமுறுத்தப்படுகிறார்கள் என்று உலக உய்கர் காங்கிரஸ் தலைவர் டொல்குன் இஸ கூறியுள்ளார். அப்பாவிகளான குடும்பத்தவரைத் தண்டிப்போம் என்ற பயமுறுத்தல் மூலம் வெளிநாட்டு உய்கர்கள் இனப்படுகொலை தொடர்பாக மௌனம் காப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் சீனா உய்கர்களை பயமுறுத்துவதில் ஈடுபட்டிருப்பதாக இவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய ஆசிய நாடுகளில் வாழும் உய்கர் மாணவர்களையும் கிழக்கு துருக்கிஸ்தானில் வசிக்கும் அவர்களின் உறவினர்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு காணொளி சந்திப்பொன்றை சமீபத்தில் ஸின்ஜியாங் வெளிநாட்டு நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கு சில மாணவர்கள் மறுப்பு தெரிவித்தனர். கலந்துகொண்டால் சீனாவில் வசிக்கும் அவர்களது பெற்றோர் சிறையில் தள்ளப்படுவர் என்ற அச்சமே காரணம் என்று உலக உய்கர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதேசமயம் வெளிநாடுகளில், குறிப்பாக மத்திய ஆசிய நாடுகளில் வசிக்கும் உய்கர்களை நாடு திரும்பும்படி அந்நாட்டு சீனத் தூதரகங்கள் வேண்டுகோள் விடுத்து வருவதாகவும் நாடு திரும்பினால் அவர்களது குடும்பத்தவருடன் இணைந்து கொள்ள வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று உறுதிமொழி வழங்குவதாகவும் இக்காங்கிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் அத்தகைய வேண்டுகோள்களின் பின்னணியில் பயமுறுத்தலும் இருப்பதாகக் கூறும் உய்கர் காங்கிரஸ், வேண்டுகோளை நிராகரித்தால் கிழக்கு துருக்கிஸ்தானில் வசிக்கும் பெற்றோர் தடுத்து வைக்கப்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

Mon, 07/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை