ரயில் என்ஜின் ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

அமைச்சருடனான சந்திப்பில் இணக்கப்பாடு

ரயில்வே என்ஜின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்றுக் காலை ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று பிற்பகலில் முடிவுக்குக் கொண்டு வந்ததாக ரயில்வே என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேயுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு இணங்க வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். ரயில்வே பிரவேச சீட்டினை இலத்திரனியல் முறைப்படி விநியோகித்தல் வேலைத்திட்டத்தை சர்வதேச நிறுவனம் ஒன்றுக்கு பெற்றுக்கொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அந்த விவகாரம் தொடர்பில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள போதும் உரிய பதில் கிடைக்காமையனாலேயே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்று முற்பகல் சில ரயில்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு, பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. எவ்வாறெனினும் ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மக்கள் எதிர்கொள்ள நேரும் அசௌகரியங்களை சமாளிக்கும் வகையில் மேலதிக பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 07/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை