முழுமையான இழப்பீட்டை பெற அரசாங்கம் தீவிர முயற்சி

கணிப்பீட்டுக்கு சர்வதேச நிறுவனங்களின் உதவி

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்காக கிடைக்கும் 40 மில்லியன் ரூபா இழப்பீடு முழு இழப்பீடல்ல என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இடைக்கால இழப்பீடு பெறப்படுகிறது. முழுமையான இழப்பீடு பெறுவதற்கான கணிப்பீடு செய்ய சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற  இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கையில் அனுபவம் இல்லாததால், வெளிவிவகார அமைச்சின் வாயிலாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வழிமுறையின்படி, அந்த நாடுகளின் ஆதரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கப்பல் கம்பனியுடன் தொடர்புள்ள நிறுவனத்தின் மூலமாக காப்பீட்டு நிறுவனத்துடன் தொடர்பு ஏற்படுத்தி வருகிறோம். மீனவர் சமூகத்திற்கு 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கோரப்பட்டது, ஆனால் மேலதிக சாட்சிகள் வழங்கும் வரை அதில் ஒரு மில்லியன் மட்டுமே எங்களுக்கு வழங்கப்பட்டது.

பெறப்பட்ட பணத்தில் அதிகமானவை அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விசேட முறையொன்றின் கீழ் அதனை விநியோகிக்க கடற்றொழில் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது . கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு மீன்பிடி சமூகங்களை அடிப்படையாகக் கொண்டு கர்தினாலின் வேண்டுகோளின் பேரில் சம்பந்தப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். அந்த கொடுப்பனவுகள் அடுத்த வாரம் முதல் வழங்கப்படும்.

சட்ட மாஅதிபர் மற்றும் சட்டத்தரணிகள் கொண்ட ஒரு தனிக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கக் கூடிய விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட தகவல்களை வழங்க அவர்கள் நடவடிக்கை எடுப்பர்.

ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகருடன் அனர்த்தங்களுக்கு முன்னதாக செயற்படுவதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. இது தொடர்பாக ஆலோசனை வழங்க அவர் ஒப்புக் கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.

    ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்பிரமணியம்

Sat, 07/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை