எரிபொருள் விலையேற்றம்; அமைச்சரவையின் உப குழு கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது

ஜனாதிபதியின் தலைமையில் பிரதமரின் பங்கேற்பில் கூடிய அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு தொடர்பிலான உப குழு கூட்டத்திலேயே எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருள் விலை தொடர்பில் ஜனாதிபதி பொறுப்பேற்ற போதிலும் அமைச்சர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். என்னை தூக்கி வெளியில் எறிந்தால் நான் மக்களின் தோளிலிலேயே வீழ்வேன். ஜனாதிபதியின் தலைமையில் பிரதமரின் பங்கேற்பில் கூடிய அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு தொடர்பிலான உப குழு கூட்டத்திலேயே எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்ற போதிலும் அமைச்சர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. அரச தலைவர் அத்தகைய அறிக்கையை வெளியிட்ட பின்னர் அது உண்மையா என ஆராய தேவையில்லை.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம், கடந்த ஜுன் மாதம் 18ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி என்னை பற்றி பல பொய்களை கூறியிருந்தார். எமது நாட்டின் தனித்துவத்தை சீனாவின் நிறுவனமொன்றுக்கு காட்டிக்கொடுத்துவிட்டதாக அவர் கூறியிருந்தார். சீன நிறுவனத்துடன் இணைந்து 1000 கோடி செலவில் எரிபொருள் டாங்கிகள் அமைக்கவுள்ளதாகவும் எரிபொருள் சுத்திகரிப்பை வெளிநாட்டுக்கு கொடுக்கும் அமைச்சரவை பத்திரமொன்றை நான் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அவர் கூறியது பொய்யென்பதை ஒப்புக்கொண்டு எனக்கு 500 மில்லியன் இழப்பீட்டை வழங்க வேண்டும் அல்லது இந்த விடயம் உண்மை என்பதை நிரூபிக்க வேண்டுமென கோரி அவருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அதற்கு அவர் பதில் அளிக்காவிடின் நீதிமன்றிலேயே இருவரும் சந்திக்க நேரிடும் என்றும் அமைச்சர் கம்மன்பில கூறினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 07/13/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை