நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் சுட்டுக்கொலை: நாட்டில் குழப்பநிலை

ஹைட்டி ஜனாதிபதி ஜொவனெல் மொயிஸை படுகொலை செய்த நான்கு சந்தேக நபர்களை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

தலைநகர் போர்ட் அவு பிரின்ஸில் சில சந்தேக நபர்களுடன் படையினர் நேற்று வரை தொடர்ந்து மோதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

'அவர்கள் கொல்லப்படுவர் அல்லது பிடிக்கப்படுவர்' என்று பொலிஸ்மா அதிபர் லியோன் சார்ல்ஸ் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை காலை ஜனாதிபதி இல்லத்திற்குள் ஊடுருவிய தாக்குதல்தாரிகள் 53 வயதான மொயிஸை சுட்டுக் கொன்றதோடு அவரது மனைவி காயத்திற்கு உள்ளானார். அவர் மேலதிக சிகிசிச்சைக்காக அமெரிக்காவின் பிளோரிடா மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

'நான்கு கூலிப்படையினர் கொல்லப்பட்டு இருவர் பிடிபட்டனர்' என்று சார்ல்ஸ் கடந்த புதன்கிழமை பின்னேரம் தொலைக்காட்சி அறிவிப்பு ஒன்றில் தெரிவித்தார். 'பணயக் கைதிகளாக பிடிபட்ட மூன்று பொலிஸாரும் விடுவிக்கப்பட்டனர்' என்றும் அவர் தெரிவித்தார்.

'குற்றம் இடம்பெற்ற பகுதியில் இருந்து அவர்கள் தப்பிச்செல்லும் பாதையை நாம் முடக்கியுள்ளோம். அது தொடக்கம் அவர்கள் தமது உயிருக்காக போராடி வருகின்றனர்' என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் படுகொலையை அடுத்து உரையாற்றிய உள்துறை அமைச்சர் கிளவ்டி ஜோசப், நாட்டு மக்களை அமைதி காக்கும்படி அழைப்பு விடுத்ததோடு நாட்டில் அவசர நிலையை அறிவித்தார்.

அவசர நிலை அறிவிப்பை அடுத்து ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்படுவதோடு இராணுவத்திற்கு மேலதிக அதிகாரங்களுடன் பொலிஸாரின் பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

'இந்த பயங்கர படுகொலை' சம்பவத்திற்காக ஹைட்டி மக்களிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜொ பைடன் தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இதனை ஒரு வெறுக்கத்தக்க செயல் என குறிப்பிட்டிருக்கும் பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அமைதி காக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

மொயிஸ் 2017 ஆம் ஆண்டு ஹைட்டி ஜனாதிபதியாக பதவி ஏற்றபோதும், அவரை பதவி விலகும்படி கோரி அண்மைக் காலத்தில் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வந்தன.

ஆட்சி கவிழ்ப்பு சதிப்புரட்சிகள், அரசியல் ஸ்தரமற்ற நிலை, பரந்த அளவில் இடம்பெறும் குற்ற கும்பல்களின் வன்முறைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் ஹைட்டி கடந்த பல தசாப்தங்களில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதோடு அமெரிக்காஸ் பிராந்தியத்தில் உள்ள வறிய நாடாகவும் காணப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதல்தாரிகள் 'ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழி பேசக்கூடிய வெளிநாட்டினர்கள்' என்று உள்துறை அமைச்சர் ஜோசப் தெரிவித்துள்ளார். ஹைட்டியின் உத்தியோகபூர்வ மொழிகளாக கிரியோல் மற்றும் பிரெஞ்ச் உள்ளது.

கறுப்பு உடையுடன் வந்த துப்பாக்கிதாரிகள் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் இருந்ததாகவும் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுவதுபோல் நடித்ததாகவும் பார்த்தவர்கள் சிலரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் அமெரிக்க போதைத் தடுப்புப் பிரிவு இவ்வாறான தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று ஹைட்டிக்கான அமெரிக்க தூதுவர் பொச்சிட் எட்மொன்ட் தெரிவித்துள்ளார். 'தொழில்முறை கூலிப்படை' இதனை செய்திருக்கலாம் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹைட்டி அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி பதவி வெற்றிடமானால் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் வரை, அமைச்சர்கள் பிரதமரின் தலைமையில் நிர்வாகத்தை கையாள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்றி ஒரு வாரத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் பதவிப்பிரமாணம் செய்யாதிருப்பது மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு அமைதியாக ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

ஜொவனெல் மொயிஸ் பதவிக் காலம் குழப்பகரமானதாக இருந்தது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அவரை பதவி விலகும்படி இந்த ஆண்டு ஆரம்பம் தொடக்கம் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்தன.

2019 ஒக்டோபரில் நடைபெற வேண்டிய பாராளுமன்ற தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டதால், மொயிஸ் தமது ஆணைகள் மூலம் ஆட்சியை முன்னெடுத்து வந்தார்.

தம்மை படுகொலை செய்து ஆட்சியை கைப்பற்றும் சதி முறியடிக்கப்பட்டதாக மொயிஸ் கடந்த பெப்ரவரியில் குறிப்பிட்டிருந்தார்.

 

Fri, 07/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை