தலிபான்களுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் ஆப்கானிய ஊடகங்கள் கருத்து

தலிபான்களுக்கு அடைக்கலமும் முகாம் வசதியையும் தருவதைப் பாகிஸ்தான் நிறுத்திய பின்னரேயே ஆப்கானிய ஜனாதிபதி அஷ்ரப் கானி தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவார் எனப் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் நூலாசிரியருமான அஹமட் ரஷீட் ஜெர்மனிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் வெடித்து நிலைமை மோசமடையுமானால் அது அயல் நாடுகளுக்கும் பரவுவதற்கு வாய்ப்புண்டு. அவ்வாறு நிகழுமானால் அதுவே ஆப்கானிஸ்தானின் அந்திமமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள இவர், பாகிஸ்தான் தன் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டுமானால் தலிபான் தலைவர்களை ஒன்றில் இணக்கப்பாட்டுக்கு வரச்செய்ய வேண்டும் அல்லது குவேட்டாவிலும் பேஷாவாரிலும் அடைக்கலம் பெற்றிருக்கும் தலிபான்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டுப் படைகள் வெளியேறி வருவதையடுத்து ஆப்கானிய எல்லைப் பகுதிகளில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி பல இடங்களைக் கைப்பற்றியுள்ள அதேசமயம் ஆப்கான் இராணுவமும் பதில் தாக்குதல்களை நடத்திவருகிறது. ஒரு முழு உள்நாட்டு யுத்தத்துக்கு இன்றைய சூழல் வழிவகுப்பதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆப்கானில் சட்டத்தரணியான அப்துல் சத்தார் சமீபத்தில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், நாம் தலிபான்களுடன் யுத்தம் செய்யவில்லை. நாம் பாகிஸ்தான் நடத்தும் மறைமுக யுத்தத்துடனேயே சம்பந்தப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தான் தனது சொந்த நலன்களுக்காகவே தலிபான்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை இஸ்லாமாபாத் நிராகரித்துள்ளது. பாகிஸ்தானில் தலிபான் முகாம்கள் கிடையாது என சமீபத்தில் அந்நாட்டு வெளிநாட்டமைச்சர் ஷா மஹ்மூத் தெரிவித்திருந்தாலும் அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஷீட் அஹ்மட், தலிபான் தலைவர்களின் குடும்பங்கள் பாகிஸ்தானில் தங்கியிருப்பதாகவும் பாக். ஆஸ்பத்திரிகளில் தலிபான்கள் சிகிச்சை பெறுவதாகவும் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் தலையீடு தொடர்பாக ஆப்கானிய ஊடகங்கள் விவாதம் நடத்திவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

Mon, 07/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை