கூட்டுப்பொறுப்பிலிருந்து நழுவும் அரசு நாமல்ல!

சபையில் அமைச்சர் பந்துல குணவர்தன

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவினூடாகவே எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஒரு அமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி கூட்டுப் பொறுப்பிலிருந்து நழுவும் அரசாங்கம் நாமல்ல என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொவிட்19 தொற்றுக்கு மேலதிகமாக எமது நாடு சமகாலத்தில் மூன்று முக்கிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. முதலாவது பிரச்சினை அரச நிதி தொடர்பிலான நெருக்கடியாகும். இரண்டாவது அந்நிய செலாவணி தொடர்பிலானது. மூன்றாவது நாட்டை முழுமையாக பின்நோக்கி நகர்த்தி பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிரணியின் நெருக்கடியாகும்.

எதிர்க்கட்சியினர் மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு கூக்குரலிட்டாலும் மக்களிடம் பெறப்படும் வரியில்தான் சலுகைகளை வழங்க முடியும். நேரடி மற்றும் மறைமுக வரியில் பெறப்படும் வரிதான் அரசின் 85 சதவீதமான வருமானமாகவுள்ளது. வரி அல்லாத வருமானத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலாபத்துடன் இயங்கினால் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிடின் அரச கட்டடங்கள் மற்றும் காணிகளை குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே, மறைமுக மற்றும் நேரடி வரியில்தான் அரச வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

2020ஆம் ஆண்டில் 1216 பில்லியன் முழு நாட்டிலும் வரி வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது. அரசை அன்றாடம் நடத்தி செல்ல செலவழிக்கப்படும் நிதிதான் அரச சேவையாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள். 1,051பில்லியன் ரூபா சம்பளம் மற்றும் கொடுப்பனவுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது. 165 பில்லியன் நிதியே மீதமாகிறது.

165 பில்லியனில் எவ்வாறு சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியும்? அரசு பெற்றுள்ள கடன்களுக்கு எவ்வாறு வட்டித் தொகையை செலுத்துவது? ஏனைய அரச செலவுகளை எவ்வாறு தாங்கிக்கொள்வது?. சுதந்திரத்தின் பின்னர் குறிப்பாக 1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமையப்பெற்ற அனைத்து அரசாங்களுக்கும் வரி வருமானத்தில் மாத்திரம் தமது செலவீனங்களை மேற்கொள்ள முடியாது போனது. ஒவ்வொரு வரவு – செலவுத்திட்டமும் பற்றாக்குறையுடன் தான் சமர்ப்பிக்கப்பட்டன.

2020ஆம் ஆண்டில் 233 பில்லியனே வற் வரியாக உள்ளது. மக்களால் சுமையை தாங்கிக்கொள்ள முடியாது என்பதால்தான் வற் வரியை ஜனாதிபதி குறைத்திருந்தார். வற் வரி அதிகரிக்கப்பட்டால் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும். ஆகவே, மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டுமென்றால் வரியை மக்களிடமிருந்தே பெற வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் கடனை பெற வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் நாட்டின் சொத்துகளை விற்பனை செய்ய வேண்டும்.

எரிபொருளில் அதிகமான வருமானம் கடந்த 2017, 2018ஆம் ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றது. நாட்டை கடந்த அரசாங்கமே முழுமையாக நாசமாக்கியது. நாசமாக்கப்பட்ட நாட்டையே நாம் மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அமைச்சரவை உப குழுவின் தீர்மானத்தின் பிரகாரமே எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. ஒரு அமைச்சரை தனிமைப்படுத்தும் அரசாங்கம் நாம் அல்ல. கூட்டு பொறுப்புடன் இயங்கும் அரசாங்கமாகும். உதய கம்மன்பில மிகவும் திறைமைவாய்ந்த இளம் அமைச்சராவார் . இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை படுதோல்வியடையும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Tue, 07/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை