அவுஸ்திரேலியாவுக்கான தூதராக ஜகத் வெள்ளவத்த

நியமிக்க அரசாங்கம் தீர்மானம்

சிரேஷ்ட விரிவுரையாளர் ஜகத் வெள்ளவத்தவை அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்போது இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றுகிறார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதல்தர சிரேஷ்ட விரிவுரையாளராக 26 வருடங்களுக்கும் மேல் சேவையாற்றியுள்ள ஜகத் வெள்ளவத்த, 2019 டிசம்பர் 27 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் விதத்தில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் 2010 மே மாதம் அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் (State Mortgage and Investment Bank) தலைவராகவும்,2007 ஏப்ரல் மாதம் முதல் 2010 மே மாதம் வரை சிறுவர்பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராகவும், 2005 டிசம்பர் மாதம் முதல் 2007 மார்ச் மாதம் வரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் தத்துவத்தில் முதுகலை பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டம் மற்றும் சமூகவியலில் கௌரவ பட்டமும் பெற்றவர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கை வகுப்பாளராகவுள்ள இவர், ‘மஹிந்த சிந்தனை’ மற்றும் ‘சுபீட்சத்தின் நோக்கு’வரைவுக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டார். சிறந்த நிர்வாகியான இவர் லங்கா ஹொஸ்பிட்டல் பணிப்பாளராகவும் இலங்கையின் முதலாவது சுதேச வைத்திய பல்கலைக்கழகத்தின் மற்றும் சமூக அபிவிருத்தி பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையின் உறுப்பினராகவும் செயற்படுகிறார்.

 

Wed, 07/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை