ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு கிடையாது; மேலும் தேவைப்பட்டால் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அதிகளவு ஒட்சிசன் தேவைப்படுவதாகவும் எனினும் தற்போது நாட்டில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு கிடையாது என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேவைப்படும் அளவு ஒட்சிசனை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எவ்வாறெனினும் தற்போது ஒட்சிசனுக்குத் தட்டுப்பாடு கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டெல்டா திரிபு வைரஸ் இலங்கையில் பரவி வரும் நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம்:

இந்தியாவைப் போன்று இங்கு கடும் மோசமான நிலைமை இதுவரை ஏற்படவில்லை. மேலும் பெருமளவில் வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டால் எமக்கு மேலதிக ஒட்சிசன் தேவைப்படலாம்.அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் மேலும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டாமென சம்பந்தப்பட்ட தரப்பினரை நாம் கேட்டுக்கொள்கின்றோம். ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களும் அதில் கலந்து கொள்பவர்களும் இக்காலத்தில் மிகுந்த பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.அது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் தமது அவதானத்தை செலுத்த வேண்டும்.

மக்கள் அதிகமாக கூடுவதால் மேலும் கொத்தணிகள் உருவாகும் அபாயம் காணப்படுகின்றது. அதற்கான பொறுப்பை எவரும் பாரமெடுக்கமாட்டார்கள் எனினும். இறுதியில் சுகாதார துறையினரிடமே அதற்கான பொறுப்பை சுமத்துவார்கள். ஆர்ப்பாட்டம் செய்பவர்களோடு சம்பந்தப்படாதவர்களும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி நேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய நிலையில் நாட்டின் சூழ்நிலையை சரியாக அவதானித்து பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Thu, 07/29/2021 - 08:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை