திங்கட்கிழமை முதல் கல்முனை பிரிவில் முதலாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் கொவிட்-19 முதலாவது தடுப்பூசி ஏற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும், நாட்பட்ட நோயாளிகள், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள், வைத்தியசாலை மற்றும் சுகாதார நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாடசாலைகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால் கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத் தடுப்பூசியினை உங்கள் அருகாமையிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்கள் அல்லது சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தடுப்பு மருந்து வழங்கும் இடங்களுக்குச் சென்று கொவிட்-19 தடுப்பூசியினை ஏற்றிக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

சுகாதார வைத்தியதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம சேவகர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாமென தெரிவித்தார். கொவிட்- 19 தடுப்பூசி எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாதெனவும், மக்கள் பீதியடையாமல் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள 50 ஆயிரம் கொவிட்-19 தடுப்பூசிகளில் இது வரையில் 12 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், இவை கிரமமான முறையில் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றப்படுமெனவும் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்படுபவர்கள் உரிய இடங்களுக்குச் சென்று தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு முதல் தடவையாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 02வது தடுப்பூசி வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இத் தடுப்பூசி வழங்கப்படுமெனவும் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றின் 03வது அலை மிக வேகமாக பரவி வருவதால் காய்ச்சல், தடுமல், இருமல் இருப்பவர்கள் எவ்வித பீதியும் அடையாமல் அருகில் உள்ள சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குச் சென்று பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் வியாழக்கிழமை (08) கிழக்கு மாகாணத்தில் 91 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு, திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 4493 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 6491 பேரும், அம்பாறை சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1968 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 2849 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 15801 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட, காரைதீவு குறூப் நிருபர்கள்)

Fri, 07/09/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை