சுற்றுலாத் துறையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அனைத்து வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ

நாட்டின் சுற்றுலாத் துறையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான வசதிகளை தொடர்ச்சியாக பெற்றுக்கொடுக்கவும் சுற்றுலாத்துறை மற்றும் அதனை அண்டிய துறைகளை மேம்படுத்துவதற்கும் தேவையான வேலைத் திட்டங்களை செயற்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை சம்பந்தமான பிரிவினருடன் நேற்றையதினம் நிதி அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் சுற்றுலாத்துறை ஹோட்டல்கள், விமான சேவை நிறுவனங்கள்,சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

உல்லாசப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நிலையில் சுற்றுலாத்துறை ஹோட்டல் உரிமையாளர்கள் விமான சேவை நிறுவனங்கள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட நிறுவனங்கள் எதிர்கொள்ள நேரிடும் சிக்கல்கள் தொடர்பில் துறை சார்ந்த பிரதிநிதிகள் இதன்போது நிதி அமைச்சரிடம் தெளிவுபடுத்தினர். அதனையடுத்து இனங்காணப்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பிரதிநிதிகளோடு இதன்போது தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ:இலக்குகளை நோக்கிய வேலைத் திட்டங்களின் கீழ் சுற்றுலாத்துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பில் வசதிகளை வழங்க அரசாங்கம் பின்னிற்காது.

கடந்த யுத்த காலங்களிலும் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த நிலையில் அந்த சவாலை வெற்றிகொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போதைய நிலைமை விரைவில் மாற்றமடையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Sat, 07/31/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை