டயகம சிறுமி மரண விசாரணைக்கு தனியான பொலிஸ் குழு அவசியம்

பாராளுமன்றத்தில் மனோ கணேசன் கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் தீக் காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் பொரளை பொலிஸ் அதிகாரியின் தலைமையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் வெளிப்படைத் தன்மையில்லை என்பதால் விசாரணைகளை மேற்கொள்ள தனி பொலிஸ் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதுடன், குற்றவாளி எவராக இருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நுவரெலியா , டயகம தோட்டம் மூன்றாம் பிரிவை சார்ந்த ரஞ்சனி ராஜமாணிக்கம் ஜெயராஜ் ஜுட் குமார் தம்பதிகளின் மகள் இசாலினி இம்மாதம் 3ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.

மலையகத்திலும் முழுநாட்டிலும் இந்த சம்பவம் சோக அலைகளையும் கோப அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவொரு அரசியல் பிரச்சினையோ அல்லது ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பிரச்சினையோ அல்லது தமிழ்,முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினையோ அல்ல. இதுவொரு சமூகப் பிரச்சினையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையுமாகும்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றிய உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பிலான பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியின்மீது திணிக்க முற்பட்டனர். இது பிழையான விடயமாகும். நாட்டை ஆள்வது நீங்கள்தான். நாங்களல்ல. அரசாங்கத்தின் கீழ்தான் பொலிஸ்துறை உள்ளது. அதனால் பொலிஸ்துறைக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவை நேற்றுமுன்தினம் முதல் தொடர்புக்கொள்ள முற்பட்டு வருகிறேன். ஆனால், அவர் எமது தொலைபேசி அழைப்புகளை எடுப்பதில்லை.

எவ்வித அழுத்தங்களுக்கும் முகங்கொடுக்கமால் இதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விசாரணைகளை மேற்கொள்ள புதிய பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். விசாரணைகளில் இருந்து பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவை அகற்ற வேண்டும். அவரது விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை.

புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு புதிய சட்ட வைத்திய அறிக்கை பெறப்பட வேண்டும். மேலதிக விசாரணைகளின் ஊடாக புதிய பொலிஸ் குழு உண்மைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். உயிரிழந்த சிறுமியின் வயதின் பிரகாரம் அவர் பணிக்கு அமர்த்தப்பட வேண்டியவரா, அவர் பாடசாலைக்குச் செல்ல வேண்டியவரா?, விசாரணைகள் முற்றுப்பெற முன்னர் பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரி எவ்வாறு இது தற்கொலையென்ற முடிவுக்கு வந்தார் ? போன்றவை வெளிப்படுத்தப்பட வேண்டும். சிறுமி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என்றால் அதற்கான காரணமென்ன? சிறுமி தற்கொலை செய்துக்கொள்ள தூண்டப்பட்டாரா? பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கட்டுள்ளாரா? என்பது கண்டறிப்பட வேண்டும். சிறுமி பணியில் இருந்த வீட்டில் உள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். அங்கு பெறப்பட்ட லைட்டர் யாருடையது? சிறுமி தற்கொலை செய்துக்கொண்டிருந்தால் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொள்ளாது ஏன் காலில் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கு பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரி விளக்கமளிக்க வேண்டும். குற்றம் நிகழ்ந்திருந்தால் குற்றவாளி எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். இவை அனைத்தையும் தமிழ் முற்போக்குக் கூட்டணி கண்காணிக்கும். ரிஷாத் பதியுதீன் மீது அரசியல் காரணிகளுக்காக நெருக்கடிகளை ஏற்படுத்தி அவரை இந்த அரசாங்கம் சிறையில் வைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக குரல்கொடுத்து நாங்கள் பேசியுள்ளோம். இந்த சம்பவம் அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. தவறு நடைபெற்றிருந்தால் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 07/21/2021 - 08:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை