பூரண குணமடையும் வரை தடுப்பூசி பெற வேண்டாம்

சுகாதார தரப்பு பொதுமக்களிடம் வேண்டுகோள்

 

கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், தொற்று குணமாகி இரு வாரங்களின் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதே பயனுடையதாக அமையுமென பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் இல்லை. ஆனால், தொற்று அறிகுறிகளுடன் அல்லது தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் சூழலில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டாம். கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று சுகமடைந்து இரண்டு வாரங்களின் பின்னர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதே பயனுடையதாக அமையும். அவ்வாறு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால் மாத்திரமே உரிய வகையில் எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகும்.

தொற்றுக்கு உள்ளானவர், தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள், வெளிநாட்டிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் என அனைவருக்கும் தனிமைப்படுத்தல் செயற்பாடு வித்தியாசப்படும். அத்தகைய திருத்தங்களுடன் கூடிய புதிய சுகாதார வழிகாட்டலே வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டலும் சில சந்தர்ப்பங்களில் மாற்றமடையும். நாட்டின் சமூகப் பொருளாதாரத்தையும் கருத்திற்கொண்டுதான் தனிமைப்படுத்தல் சட்டத்தில் தளர்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 07/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை