திருமணம், மரண நிகழ்வுகளுக்கு மாகாணங்களை கடந்து பயணிக்க அனுமதியில்லை

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நடைமுறையிலுள்ள நிலையில் திருமண உற்சவங்கள் மற்றும் மரண நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு மாகாண எல்லைகளைக் கடந்து எவரும் பயணிக்க முடியாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேவேளை மிக நெருக்கமான உறவினர்களின் மரண நிகழ்வுகளுக்கு மாத்திரம் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து மாகாணங்களுக் கிடையில் பயணிக்க அனுமதி பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டு மாகாணங்கள் சம்பந்தப்பட்ட திருமணங்கள் நடைபெறும்போது இரு தரப்பினரில் ஒரு தரப்பினர் ஏனைய மாகாணத்திற்கு பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்போது மணமகன்அல்லது மணமகளின் பெற்றோர்கள் அவ்வாறு பயணிக்க முடியுமென தெரிவித்துள்ள அவர், வேறு எவருக்கும் அவ்வாறு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைய திருமண நிகழ்வொன்றில் 150 பேரே கலந்து கொள்ள முடியும் என்றும் அல்லது சம்பந்தப்பட்ட மண்டபத்தில் நான்கில் ஒரு மடங்கு நபர்களே கலந்து கொள்ள முடியும் என்பதையும் அவர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 07/20/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை